தமிழக முதல்வரை இன்று பாஜக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ''கலவரச் சூழ்நிலைகளைத் தடுக்கும் வகையில், இது போன்ற சூழ்நிலைகள் எதிர்காலத்தில் வரக்கூடாது என்பதற்காக அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரால் வேணுகோபால் கமிஷன் நியமிக்கப்பட்டது. அந்த கமிஷன் நீண்ட காலம் இந்த பிரச்சனை குறித்து பல பேரிடம் விசாரணை நடத்தி தன்னுடைய இறுதி அறிக்கையைக் கொடுத்திருக்கிறார்கள்.
அதனடிப்படையில், ஏற்கனவே இருக்கக்கூடிய ஒரு வழிபாட்டுத் தலத்தின் அருகாமையில் மற்றொரு வழிபாட்டுத்தலம் திடீரென அமைப்பது தான் பிரச்சனைக்கான அடிப்படைக் காரணங்களில் முதல் காரணம் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். எனவே எதிர்காலங்களில் ஒரு வழிபாட்டுத்தலம் கட்டப்பட வேண்டும் என்று சொன்னால் அதற்கு எதிர்ப்பு அற்ற நிலைமை இருக்க வேண்டும். எதிர்ப்பு இருக்கிறது என்று சொன்னால் அரசாங்கத்திற்கு மனு போட்டு அரசின் அனுமதி பெற்றுத்தான் கட்ட வேண்டும் என்கிற ஒரு நிலையைத் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.'' என்றார்.