பாஜக இந்தியாவில் பல மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சி செய்து வருகிறது. தேர்தலில் தோல்வியைத் தழுவினாலும், பிற கட்சிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்களைத் தன் பக்கம் இழுத்து ஆட்சியை அமைத்து வருவதாகக் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியிலிருந்த தேசிய வாத காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் தலைமையில் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் பாஜகவிற்கு ஆதரவு தெரிவிக்க அங்கு உத்தவ் தாக்கரேவின் அரசு கவிழ்க்கப்பட்டது. சிவசேனாவிற்குள் திட்டமிட்டு பிளவு ஏற்படுத்தி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக ஆட்சி அமைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்த மூத்த தலைவரும் சரத் பவாரின் சகோதரரின் மகனுமான அஜித் பவார் தன்னையும் தனது ஆதரவாளர்களான 9 எம்.எல்.ஏக்களுடன் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். பாஜக கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவையில் அஜித் பவார் துணை முதல்வராகவும், அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. மகாராஷ்டிராவில் முதலில் சிவசேனா கட்சியை உடைத்த நிலையில், அடுத்ததாக சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் உடைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் பீகார் முதல்வரான நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியை உடைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுத்திப்படுத்தும் வகையில் பேசிய பீகாரின் முன்னாள் துணை முதல்வரும், தற்போதைய பாஜக எம்.பியுமான சுஷில்குமார் மோடி, “ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் தற்போது கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்த கட்சியில் உள்ள பலரும் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர். அந்த கட்சியில் இருக்கும் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் எப்போது வேண்டுமானாலும் பிரிந்து பாஜகவுடன் வருவார்கள். அதற்குக் காரணம், ராஷ்ட்ரியா ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வியை இவர்கள் ஏற்கவில்லை. அதோடு ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் தலைவராக ராகுல் காந்தியை ஏற்கவும் முடியாத மன நிலையில் இருப்பதால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் பாஜகவிற்கு வந்துவிடுவார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்தது போல் பீகாரில் அரசியல் மாற்றம் உருவாகலாம். இனி வரும் நாட்களில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் எதுவும் நடக்காது என்று உறுதியளிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.