
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வசித்து வருபவர் பாஜக பிரமுகர் நாஞ்சில் ஜெயக்குமார். இவர் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கோரி லட்சக் கணக்கில் பண மோசடி செய்துள்ளார். இது குறித்து பல வழக்குகள் ஜெயக்குமார் மீது உள்ளன. இந்த நிலையில், பாஜக பிரமுகர் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்குள்ள பெண் மருத்துவரிடம் தான் ஒரு அரசியல் கட்சி பிரமுகர் என்று அறிமுகமாகியுள்ளார். இந்த நிலையில், வழக்கம்போல சிகிச்சைக்கு பல் மருத்துவமனைக்கு சென்ற நாஞ்சில் ஜெயக்குமார் ஆபாசமாக இருக்கையில் அமர்ந்திருக்கிறார். இதனை அந்த பெண் மருத்துவர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாஞ்சில் ஜெயக்குமார் அவரை ஆபாசமாகப் பேசி மிரட்டிவிட்டு சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நாஞ்சில் ஜெயக்குமார் பெண் மருத்துவரை தொலைப்பேசியின் மூலம் தொடர்புகொண்டு ஆபாசமாகப் பேசி, உன் புகைப்படத்தை மார்பிங் செய்து என் செல்போனில் வைத்திருக்கிறேன், எனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் இதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பெண் மருத்துவர், கோட்டார் காவல்நிலையத்தில் நாஞ்சில் ஜெயக்குமார் மீது புகார் அளித்துள்ளார். அதன் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்தனர்.