அண்மையில், திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜக பெண் நிர்வாகிகள் குறித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி சார்பில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக பேச்சாளரின் கருத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாஜக மகளிர் அணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்ட நிலையில் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அங்கு போராட்டம் நடத்திய பாஜக மகளிர் அணி நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதன் பின்பு, கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதனிடையே அண்ணாமலையை கைது செய்ததைக் கண்டித்து சென்னை மணலி அருகே பாஜக நிர்வாகி குபேரன் மது போதையில் காவல்துறையினரிடம் வாக்குவாதம் நடத்தியதோடு, தனி ஆளாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் தனது காரை சாலையின் குறுக்கே நிறுத்தி ஆம்புலன்சுக்கு இடையூறும் ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் மறியலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி குபேரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.