வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறும் பயனாளிகளின் ஆண்டு குடும்ப வருமானம் 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200 ரூபாய், தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாய், பிளஸ்2 முடித்தவர்களுக்கு 400 ரூபாய், பட்டதாரிகளுக்கு 600 ரூபாய் மாதந்தோறும் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் எஸ்எஸ்எல்சி மற்றும் அதற்கும் கீழ் கல்வித்தகுதி உள்ளவர்களுக்கு 600 ரூபாய், பிளஸ்2 தேர்ச்சி பெற்றிருந்தால் 750 ரூபாய், பட்டதாரிகளுக்கு 1000 ரூபாய் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளி பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து, ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி., பிரிவினருக்கு 45 வயதும், மற்றவர்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழில் படிப்புகள் தவிர, எஸ்எஸ்எல்சி தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு (முறையாக பள்ளியில் படித்து தோல்வி அடைந்திருக்க வேண்டும்) அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதியுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.
தற்போது, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகையை பெற ஆண்டு வருமான உச்சவரம்பு 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. எனவே, செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் காலாண்டிற்கு தகுதியுடைய வேலைவாய்ப்பற்றவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பம் பெற்று பயனடையலாம்.