சென்னையில், பா.ஜ.க. பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த கொலையாளிகள் நான்கு பேர், சேலத்தில் பதுங்கி இருந்தபோது தனிப்படை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் பாலசந்தர் (வயது 30). பா.ஜ. கட்சியில், மத்திய சென்னை மாவட்ட எஸ்சி பிரிவு தலைவராக இருந்தார். இவர் மீது ஏற்கனவே மதக்கலவரத்தைத் தூண்டியது, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் அவருக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் மே 24- ஆம் தேதி, காவல்துறை பாதுகாப்பை தவிர்த்துவிட்டு நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். இந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த மர்ம நபர்கள் சிலர், அவரை ஓட ஓட விரட்டிச்சென்று அரிவாளால் வெட்டிப்படுகொலை செய்தனர்.
இதையடுத்து கொலையாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சந்தேகத்திற்குரிய நான்கு பேரின் செல்போன் பேச்சை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அந்த எண்களுக்கு உரியவர்கள் சென்னையில் இருந்து சேலம் மாவட்டத்திற்குச் சென்றிருப்பது தெரிய வந்தது.
சந்தேகத்திற்குரிய மர்ம நபர்கள், சேலம் மாவட்டம் தேவூர் அருகே உள்ள குஞ்சாம்பாளையத்தில் உள்ள ஒருவரின் வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. சென்னையில் இருந்து வந்த தனிப்படையினர், உள்ளூர் காவல்துறையினர் உதவியுடன் மர்ம நபர்களை வியாழக்கிழமை (மே 26) அதிகாலை 4 மணியளவில் சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர்களின் பெயர்கள் பிரதீப், சஞ்சய், கலைவாணன், ஜோதி என்பதும், அவர்கள்தான் பாலசந்தர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கொலையாளிகள் என்பதும் தெரிய வந்தது. தொடர் விசாரணைக்காக அவர்களை காவல்துறையினர் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். முதல்கட்ட விசாரணையில், ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பாலசந்தரை தீர்த்துக் கட்டியிருப்பது தெரிய வந்தது.
அதாவது, சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த ரவுடி மோகன் என்கிற தர்கா மோகனுக்கும், பாலசந்தருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. பா.ஜ.க.வில் அடைக்கலம் ஆகிவிட்ட பாலசந்தர், தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, தர்கா மோகன் மாமூல் கேட்டு மிரட்டுவதாக உறவினர்கள் மூலம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் தர்கா மோகனையும், அவருடைய மருமகன் தினேஷ்குமாரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பொய் புகாரில் தனது தந்தையை கைது செய்ய காரணமான பாலசந்தரை தீர்த்துக்கட்ட, தர்கா மோகனின் மகன்களான பிரதீப், சஞ்சய் ஆகியோர் அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
சம்பவத்தன்று அவர்கள், தங்கள் நண்பர்கள் கலைவாணன், ஜோதி ஆகியோர் துணையுடன் பாலசந்தரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்திருப்பது தெரிய வந்தது.
சென்னையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் கொலையாளிகளுடன் அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பில் இருந்துள்ளார். அந்த வழக்கறிஞர்தான், கொலையாளிகளை சேலம் மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் சரணடைய வைக்க திட்டமிட்டு, சேலத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள மற்றொரு வழக்கறிஞரின் உதவியை நாடிய அந்த பெண் வழக்கறிஞர், அவர் மூலமாக குஞ்சாம்பாளையத்தைச் சேர்ந்த குட்டி என்கிற பழனிசாமி என்பவருடைய வீட்டில் கொலையாளிகளை தங்க வைத்துள்ளார்.
சேலம் மாவட்ட காவல்துறையிடம் கேட்டபோது, அடைக்கலம் கொடுத்த குட்டி என்கிற பழனிசாமி, தனக்குச் சொந்தமான விருந்தினர் அறையில் கொலையாளிகளை தங்க வைத்துள்ளார். காவல்துறையினர் கைது செய்யும் வரை அவர்கள் கொலையாளிகள் என்பது பழனிசாமிக்கு தெரியாது. உள்ளூர் வழக்கறிஞர் ஒருவர் தனது உறவினர்கள் என்று சொன்னதை நம்பி, அடைக்கலம் கொடுத்துள்ளார் என்றனர்.
இந்த சம்பவத்தில் மேலும் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்தும், முன்விரோதத்தால் இந்த கொலை நடந்ததா? அல்லது அரசியல் கொலையா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.