Skip to main content

அவர்களைப் பற்றி பேசாமல் இருப்பதுதான் ராகுல் காந்திக்கு நல்லது! - வானதி சீனிவாசன் பட்ஜெட் பேட்டி

Published on 01/02/2019 | Edited on 02/02/2019
modi



மத்திய பாஜக அரசு வெள்ளிக்கிழமை இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. பட்ஜெட் தொடர்பான கருத்துக்களை நக்கீரன் இணையதளத்திடம் பகிர்ந்து கொண்டார் பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன்.
 

தனி நபர் வருமான உச்சவரம்பு ரூபாய் இரண்டரை லட்சத்தில் இருந்து ரூபாய் 5 லட்சமாக உயர்த்துவோம் என்று கடந்த 2014 பாராளுமன்றத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தீர்கள். கடந்த நான்கரை வருடமாக அதனை நிறைவேற்றாமல் தற்போது அதனை நிறைவேற்றுவதற்கான காரணம் என்ன? தேர்தல் வருவதாலா?
 

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை எந்த அளவுக்கு நிறைவேற்றுகிறது என்பது ஒரு அளவுகோல். அந்த வகையில் பாஜக கொடுத்த வாக்குறுதி இந்த வருட பட்ஜெட்டில் நிறைவேற்றியிருக்கிறோம். ரூபாய் ஐந்து லட்சம் வருமான உச்சவரம்பு என்பது மிக நீண்ட காலமாக மக்களின் எதிர்பார்ப்பில் இருக்கக் கூடிய விசயம். ஒரு அரசாங்கத்திற்கு மக்களுக்கு கொடுத்த உறுதிமொழியை காப்பாற்ற வேண்டும் என்ற கடமை இருக்கிறது. அந்த வகையில் இந்த அறிவிப்பு என்பது குறிப்பாக மத்திய தர வர்க்கத்துக்கு மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது. 
 

முதலில் செய்தால் அதற்கு ஒரு விமர்சனம். கடைசியாக செய்தால் அதற்கு ஒரு விமர்சனம். ஐந்து வருட காலம் பதவியில் இருந்து தேர்தல் தேதி அறிவிக்கும் வரைக்கும் ஒரு அரசாங்கம் செய்துகொண்டிருக்கலாம். இந்த காலத்திற்குள் இதனை செய்ய வேண்டும் என்பது இல்லை. மிக மோசமான நிதி நெருக்கடியில் காங்கிரஸ் அரசாங்கம் விட்டுவிட்டு போனது, அதை கொஞ்சம் கொஞ்சமாக சீர்படுத்தி, சரிப்படுத்தி கடையில் நிறைவேற்ற வேண்டியதாக இருக்கிறது. 
 

தனிநபர் வருமான உச்சவரம்பை உயர்த்தியதால் வருமான வரி கட்டுபவர்களின் எண்ணிக்கை குறையுமே. அதனால் அரசுக்கு வர வேண்டிய வருமானமும் குறையுமே. அதை எப்படி ஈடுகட்டுவீர்கள். 
 

வரி விதிப்பில் ஜி.எஸ்.டி. கொண்டுவந்து மிகப்பெரிய சீர்திருத்தத்தை இந்த அரசு செய்துள்ளது. ஜி.எஸ்.டி. தொடர்பாக பேசப்பட்டு வந்தாலும்கூட இறுதியில் பாஜக அரசால்தான் அதனை நிறைவேற்ற முடிந்தது. ஜி.எஸ்.டி. கவுன்சில் நிர்வாகத்தில் மாநிலத்திற்கு ஒரு முக்கிய பங்கை கொடுத்து எல்லா தரப்பையும் ஒருமித்த கருத்தோடு நடத்திக்கொண்டு செல்கின்ற அளவுக்கு ஜி.எஸ்.டி.யை மாற்றி அமைத்தவர் மோடி. பணமதிப்பிழப்புக்கு பிறகு வருமான வரிக்குள் நிறையப் பேர் வந்துள்ளனர். சிறிது சிறிதாக பங்கு பரிவர்த்தனைகள், ஆன்லைன் பரிவர்த்தனைகள் வாயிலாக கருப்பு பணம் நடமாட்டம் குறைந்துகொண்டே வருகிறது. இதன் வாயிலாக அரசாங்கத்திற்கான வருவாய் ஈட்டக்கூடிய வழிகள் நேர்மையாக பெருகியிருக்கிறது. ஆகையால் நிச்சயமாக இதனை ஈடுகட்ட முடியும். 

 

vanathi srinivasan



பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எந்த ஒரு விளக்கமும் தரவில்லையே?
 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி பட்ஜெட்டில்தான் சொல்ல வேண்டும் என்பது இல்லை. ஏற்கனவே 2014ல் என்ன விலையில் இருந்ததோ அந்த விலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் வாங்குவதில் இந்திய ரூபாய்க்கான பரிவர்த்தனையை உலக அளவில் மோடி அறிமுகப்படுத்தியிருக்கிறார். இதன் வாயிலாக ரூபாய் 100க்கு போகும் பெட்ரோல், அதை வைத்து இந்த அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துவிடலாம் என்று நினைத்த எதிர்கட்சிகள் வாயை அடைத்து பெட்ரோல் டீசல் விலையை குறைத்து நாட்டில் அந்த பேச்சு இல்லாமல் செய்திருக்கிறார். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவருவதற்கு மாநில அரசின் ஒத்துழைப்பு இருந்தால்தான் என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால் மத்திய அரசாங்கம் மட்டுமே பெட்ரோல், டீசல் விலையை முடிவு பண்ணிட முடியாது. 
 

மெட்ரோ ரயிலுக்கு 2ம் கட்ட நிதி அறிவிக்கவில்லையே என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளாரே?
 

பட்ஜெட்டில் ஏதாவது ஒரு குறையை கண்டுபிடித்து சொல்ல வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் சொல்லக்கூடியவைதான். அதைத்தான் வைகோ அவர்கள் சொல்லியிருக்கிறார். மெட்ரோ ரயில், துறைமுகம், எட்டு வழிச்சாலை, புதிய மருத்துவமனை போன்றவற்றிருக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியிருக்கிறது. எல்லாவற்றையும் பட்ஜெட்டில்தான் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. உள்கட்டமைப்பு வசதிகளை பொருத்தவரைக்கும் ஸ்மார்ட் சிட்டி, அம்ருத் சிட்டி என அதிகமான நிதிகளை தமிழகம் பெற்றிருக்கிறது. 
 

2030க்குள் இந்தியாவில் உள்ள ஆறுகளை தூய்மை செய்து சுத்தமாக குடிநீரை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கங்கையை சுத்தப்படுத்துவதாக நிதி ஒதுக்கினீர்களே என்ன ஆனது?. 
 

கங்கை நதியை தூய்மைப்படுத்துவதில் பெருமளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறோம். அண்மையில் ஏ.என்.ஐ.க்கு கொடுத்த பேட்டியில் கூட பிரதமர் மோடி இதனைப் பற்றி தெளிவாக கூறியிருக்கிறார். 120 வருடமாக கங்கையை அசுத்தப்படுத்திக்கொண்டிருந்த ஒரு கால்வாயை மாத்தியிருக்கிறார்கள். கங்கை நதியின் தூய்மை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பதாக உலக தர ஆய்வு நிறுவனமே அறிக்கை கொடுத்திருக்கிறது. பெருமளவு முன்னேற்றம் கங்கை நதி தூய்மைப்படுத்துவதில் நடந்துகொண்டிருக்கிறது. 
 

மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து கொண்டிருந்த நேரத்தில் தமிழக பட்ஜெட் 8ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதே? அதைப்பற்றி...
 

ஒவ்வொரு அரசாங்கமும் பட்ஜெட் அறிவிக்கிற தேதியை குறிப்பிட்ட காலத்திற்குள் கொண்டுவரவேண்டும். அந்த வகையில் அறிவித்திருக்கலாம். 

வரக்கூடிய தேர்தலுக்கு பின் எடுக்கப்பட உள்ள புதிய வளர்ச்சிப்பாதைக்கான டிரைலர் என பிரதமர் மோடி சொல்லியிருக்கிறாரே? இடைக்கால பட்ஜெட்டை தேர்தலுக்கான அறிக்கையாக பயன்படுத்திக் கொண்டதா பாஜக?. 
 

ஒரு அரசாங்கம் பட்ஜெட்டில் மக்களுக்காக என்ன வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறார்களோ, அதை நிறைவேற்றினால் அது அரசியல் என்றால் இதுவும் அரசியலாக இருக்கட்டுமே?
 

ஹைட்ரோ கார்பன் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதை குறைப்பதற்கு, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படாதா?
 

நம் நாட்டில் பெட்ரோலிய பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான கார்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. பெட்ரோல், டீசலை நம் நாட்டில் நாமே சுயமாக உற்பத்தி செய்யாத வரைக்கும் அந்நிய செலாவணி நம் கையைவிட்டு போய்க்கொண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு நாம் தன்னிறைவோடு இருக்க வேண்டும் என்றால் நம் நாட்டிலேயே நாம் எரிபொருளுக்கான தேவைகளை அடைந்தாக வேண்டும்.  எந்த ஒரு வளர்ச்சித் திட்டத்தையும் விவசாயத்தோடு ஒப்பிட்டால் இங்க ரோடு கூட போட முடியாது. எய்ம்ஸ் மருத்துவமனையையும் கட்ட முடியாது. ஆகையால் எப்போதுமே விவசாயத்தோடு அனைத்தையும் முடிச்சிப்போடாதீர்கள். 
 

விவசாயிகளுக்கு மாதம் ரூ. 500 கொடுக்கும் வகையில் திட்டம் கொண்டுவந்துள்ளது பற்றி பேசிய ராகுல் காந்தி, “உங்களால் 15 பேரின் ரூ. 3.5 லட்சம் கோடி  கடனை தள்ளுபடி செய்ய முடிகிறது, ஆனால் விவசாயிகளுக்கு மட்டும் நாளொன்றுக்கு ரூ. 17 அறிவிக்கிறீர்கள். இது அவமதிப்பு இல்லாமல் வேறு என்ன? என கேட்டுள்ளாரே?
 

காங்கிரஸ் கட்சி ஒழுங்காக ஆட்சி செய்திருந்தால் இந்த நாட்டில் ஏழைகளும் இருந்திருக்க மாட்டார்கள். விவசாயிகளும் கஷ்டப்பட்டிருக்க மாட்டார்கள். ஆகவே ராகுல் காந்தி ஏழைகள், விவசாயிகள் பற்றி பேசுவதை விட்டுவிடுவது அவருக்கும், அவரது கட்சிக்கும் நல்லது. 


 

சார்ந்த செய்திகள்