இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் மாநகர மாவட்ட பா.ஜ.க. சார்பில் மருத்துவர் சரவணன் தலைமையில் ‘நல்லாட்சி தினம்’ எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இவ்விழாவில், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் பா.ஜ.க. நல்ல வளர்ச்சி பெற்று வருகிறது. பா.ஜ.க.வை எதிர்க்க அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றினைய வேண்டும் என செல்கிறார்கள். அனைவரும் சேர்ந்தால் கூட பா.ஜ.க.வை வீழ்த்த முடியாது. புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட தடையில்லை. மதுக்கடைகள் திறக்க மட்டுமே நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. புதுச்சேரிக்கு மாநில அரசு அந்தஸ்து பெற முதல்வர் உள்ளிட்ட அனைவரும் பிரதமரை சந்தித்து வலியுறுத்துவோம். இந்தியாவில் பிற மாநிலங்களை விட புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு உள்ளது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா, "காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த சட்டங்களை காங்கிரஸ் பின்பற்றவில்லை. அச்சட்டங்களை பா.ஜ.க. பின்பற்றி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து தொண்டு நிறுவனங்கள் பெறும் நிதியை முறையாக செலவு செய்யப்பட்டதா என்பதற்காகவே வரவு - செலவு கணக்கு தாக்கல் செய்ய சட்டம் கொண்டு வரப்பட்டது. 2014ஆம் ஆண்டில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஆய்வு செய்ததில் எந்தவொரு மிஷினரி அமைப்பும் வரவு - செலவு தாக்கல் செய்யவில்லை. சாப்பாடு போட்டு மதம் மாற்றம் மட்டுமே செய்துள்ளனர். இந்தியாவில் எந்தவொரு மிஷினரி அமைப்பையும் பா.ஜ.க. அரசு தடை செய்யவில்லை. சிதம்பரம் மத வாதமாக பேசி வருகிறார். சி.ஏ.ஏ. சட்டம் இயற்றிய உடன் சிதம்பரம் வேலி தாண்டி வந்தவரை என்ன செய்வது என கேட்டார். வேலி தாண்டி வரும் மாட்டை அடித்து விரட்டுவது போல விரட்ட வேண்டும். பா.ஜ.க. அரசு மத ரீதியாக மக்கள் பிரித்து பார்க்கவில்லை. முன்னாள் அமைச்சர்கள் மீது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது. பழி வாங்கும் நடவடிக்கை என்பது இரு முனை கத்தி, திமுக - அதிமுக மாறி மாறி ஆட்சி செய்துள்ளது. முன்ன பாய்ந்த வாய்க்கால் பின்ன பாயும் என திமுக அரசு புரிந்து கொள்ள வேண்டும்" என கூறினார்.