பா.ஜ.க.வின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜாவின் 66ஆவது பிறந்த நாள் நேற்று (29-09-23) கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பா.ஜ.க தலைவர்கள், தொண்டர்கள் நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் எச்.ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து, எச்.ராஜாவின் சொந்த மாவட்டமான சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் மணி மந்திர விநாயகர் கோவிலில் எச்.ராஜா பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டு பூஜையை பா.ஜ.க நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த சிறப்பு வழிபாட்டு பூஜையை பா.ஜ.க கூட்டுறவுத் துறை பிரிவு மாநில செயலாளர் பால ரவிராஜன் தலைமையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்வுக்கு சிவகங்கை மண்டலத் தலைவரும், திருப்புவனம் ஒன்றிய தலைவருமான மோடி பிரபாகரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக எச்.ராஜா நேற்று இரவு அங்கு வந்திருந்தார். அங்கு வந்த எச்.ராஜாவை, பால ரவிராஜன் தரப்பினர் வரவேற்பு அளித்து அழைத்து வந்தனர். அப்போது அந்த இடத்திற்கு வந்த மோடி பிரபாகரன் மற்றும் அவரது தரப்பினர், எச்.ராஜாவை சாமி கும்பிட விடாமல் தடுத்து காரை மறித்தனர். மேலும், அவர்கள் எச்.ராஜா வருகை குறித்து எங்களுக்கு ஏன் உரிய தகவலை தெரிவிக்கவில்லை? என்று பால ரவிராஜனிடம் கேள்வி கேட்டு வாக்குவாதம் செய்தனர்.
அப்போது, எச்.ராஜா மோடி பிரபாகரனை சமாதானம் செய்ய முயற்சித்தார். ஆனால், பால ரவிராஜனுக்கும், மோடி பிரபாகரனுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில், எச்.ராஜாவின் முன்னிலையில் இரு தரப்பினரும் அடிதடியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அங்கிருந்த காவல்துறையினர் அனைவரையும் சமாதானம் செய்து எச்.ராஜாவை பாதுகாப்பாக திருப்பி அனுப்பி வைத்தனர். இருதரப்பினர் பிரச்சனையால் பிறந்தநாள் விழா கொண்டாட வந்த எச்.ராஜாவை பா.ஜ.க.வினரே விரட்டியடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.