ஆசியாவிலேயே உயரமான குதிரை சிலை கொண்ட குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் மாசிமத் திருவிழாவில் குதிரை சிலைக்கு 35 அடி உயரத்தில் காகிதப் பூ மாலைகள் ஆயிரக்கணக்கில் குவிந்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் கிராமத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் உள்ளது பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில். கோயிலின் முன்னால் 33 அடி உயரத்தில் வானில் தாவிச் செல்லும் தோற்றத்துடன் ஒரு குதிரை சிலையும் எதிரே ஒரு யானை சிலையும் அமைக்கப்பட்டிருந்தது. வில்லுனி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போது யானை சிலை உடைந்து போனது. ஆனால் குதிரை சிலை அப்படியே 100 ஆண்டுகளை கடந்தும் நிற்கிறது. சுண்ணாம்பு பயன்படுத்தி கட்டப்பட்ட குதிரை சிலை அதிக வலுவுள்ள சிலை.
10 ஆண்டுகளுக்கு முன்பு முன்னால் அமைச்சர் வெங்கடாசலம் தலைமையில் கிராமத்தார்களின் துணையுடன் பலரது உதவியுடன் கோயில் சீரமைப்பு பணிகள் நடந்த போது குதிரை சிலையை சீரமைக்க உடைக்க முடியாத அளவில் வலுவாக இருந்ததால் அப்படியே மராமத்து செய்யப்பட்டு கம்பீரமாக நிற்கிறது 33 அடி குதிரை சிலை.
இந்த குதிரை சிலையுடன் கூடி பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் திருவிழா மாசிமகத்தில் 2 நாட்கள் நடக்கிறது. இந்த திருவிழாவின் சிறப்பே 33 அடி உயர பிரமாண்ட குதிரை சிலைக்கு 35 அடி உயரத்தில் காகிதப் பூ மாலைகளை அணிவித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்வது தான். லாரி, வேன், கார், போன்ற வாகனங்களில் மாலைகளை ஏற்றி வந்து குதிரை சிலைக்கு அணிவித்து வழிபட்டு செல்கிறார்கள் பக்தர்கள். இந்த மாலைகள் 3 மாதங்களுக்கு முன்பிலிருந்தே தயாரிக்கும் பணிகள் தொடங்கிவிடுகிறது.
இன்று மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை முதல் கிராமத்தில் சார்பில் குதிரை சிலைக்கு வெள்ளை, பச்சை பட்டுகள் மாலை போல அணிவிக்கப்பட்டு தொடர்ந்து முதல் மாலையாக சம்பங்கி பூ மாலை அணிவித்து தீபாரதணை காட்டப்பட்ட பிறகு தொடர்ந்து காய்கனி, பழங்களால் கட்டப்பட்ட மாலைகள் குதிரை சிலைக்கு பக்தர்களால் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து லாரி, கார், வேன் களில் சுமார் 2 கி.மீ தூரம் வரை நீண்ட வரிசையில் நின்று மாலைகளை கொண்டு வந்து அணிவித்தனர். ஆயிரக்கணக்கில் மாலைகள் குவிந்தது. மாலைகளை அணிவிக்க வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. இன்றும் மாலைகள் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
பல்வேறு இடங்களில் சர்க்கஸ் நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், அன்னதானம். மாலைகள் அணிவிப்பதை காண புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை மற்றும் பல மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். பக்தர்களின் வசதிக்காக அறந்தாங்கி, பேராவூரணி, புதுக்கோட்டை, கீரமங்கலம், வடகாடு, கொத்தமங்கலம், திருச்சிற்றம்பலம் என பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. பால்குடம், காவடி, கரும்பு தொட்டில் என பல்வேறு நேர்த்திக்கடன்களும் செய்கிறார்கள்.
ஒரு பக்தர் கூறும் போது... இந்த கோயில் திருவிழாவின் சிறப்பே ஆசியாவிலேயே உயரமான குதிரை சிலைக்கு மாலை அணிவிப்பது தான். வழக்கமாக பளபளக்கும் மாலைகள் அணிவிக்கப்படும். இந்த ஆண்டு எளிதில் மக்கும் காகித பூ மாலைகளையே பக்தர்கள் அணிவிக்கின்றனர். ஒரு மாலை ரூ. 3 முதல் 10 ஆயிரம் வரை ஆகிறது. சுமார் 2 ஆயிரம் மாலைகள் வரை குதிரை சிலைக்கு அணிவிக்கப்படும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். வெளிநாடுகளில் உள்ள இளைஞர்கள் இந்த நாளில் சொந்த ஊருக்கு வந்துவிடுவார்கள் என்றார்.
ஆசியாவிலேயே உயரமான குதிரை சிலைக்கு காகிதப் பூ மாலைகள் அணிவிப்பதை காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டுள்ளதை போல திங்கள் கிழமை இரவு நடக்கும் தெப்பத் திருவிழாவையும் காண மக்கள் கூடுவார்கள் என்பதால் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.