தமிழ்நாட்டில் பிற மதங்களைத் தழுவியவர்கள் தாய் மதத்துக்குத் திரும்ப விரும்பும் போது, அவர்களின் பெயர்மாற்றம் மற்றும் மதமாற்றம் குறித்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தீர்வு கண்டவுடன், அந்த விபரங்கள் அரசு கெசட்டில் வெளியிடப்படுகின்றன.
இந்தப் பணியை சென்னை அண்ணாசாலையில் இயங்கி வரும் உதவி இயக்குநர் (வெளியீடுகள்), எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்கம் மற்றும் மதுரை கே.புதூரில் இயங்கிவரும் அதன் கிளை அலுவலகம் செய்து வருகிறது.
இந்நிலையில், மேற்கண்ட அலுவலகம் குறித்து விருதுநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் (அரசு தொடர்பு பிரிவு) ஜெயக்கொடி பாலசுப்பிரமணியன் தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலருக்கு மனு ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில் ‘இந்த அலுவலகம் குறித்த குறைகள் சமீப காலமாக பொதுமக்களால் பேசப்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் நபர்களில் பலரும் மாற்று மதங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகிறது.
ஏனென்றால், அனுப்பப்படும் மனுக்கள் சரியாகப் பூர்த்தி செய்யப்பட்டு தேவையான ஆவணங்கள் இணைக்கப்பட்டிருந்தாலும், காரணமில்லாமல் சான்றிதழைத் திரும்பவும் கேட்பது, தேவையில்லாத சான்றிதழைக் கேட்பது, தொடர்ந்து மூன்று மாதங்கள் மனுக்களைக் கிடப்பில் போடுவது, அதன்பிறகு திருப்பி அனுப்புவது போன்ற தவறான செயல்கள் நடந்து வருகின்றன.
எனவே, இது குறித்து விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். மேற்கண்ட அலுவலகத்தில் நன்றாகத் திறம்பட வேலை பார்க்கக் கூடிய, கூடுதல் முதுநிலை பட்டம் பெற்ற பட்டதாரிகளை நியமித்து, துரிதமாகப் பணியாற்ற தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.