கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கும்பகோணத்தைச் சேர்ந்த ஒருவரது மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதோடு அந்தத் தெருவையும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவர், மேற்கிந்திய தீவில் சமையற் கலைஞராக வேலை பார்த்துவந்தார். விடுப்பில் ஊருக்கு வந்த இவருக்கு கடந்த மாதம் 18 ம் தேதி சளி, இருமலுடன் கூடிய காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை சோதித்த மருத்துவர்கள் கரோனா அறிகுறி இருப்பதாக சந்தேகித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பிறகு அவரை அங்குள்ள கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவரது மனைவியும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் சமையற் கலைஞரின் சகோதரர் மற்றும் அவருக்கு சிகிச்சையளித்த 5 செவிலியர்கள் உள்பட 7 பேர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர் வசித்த பகுதியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டிக்கு கடந்த சில நாட்களாக சளி, இருமல், காய்ச்சல் இருந்ததால் அவரையும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், "கும்பகோணம் பகுதியில் வயது முதிர்ந்தவர்கள் சளி, இருமல், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்களைக் கண்டறிந்து உடனடியாக அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம். கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் தற்போது 84 படுக்கைகள் உள்ளன. மேலும் கூடுதலாக 116 படுக்கைகள் அமைக்கப்படும்," என்றனர்.
சமையல் கலைஞர் வசிக்கும் தெரு மற்றும் சுற்றியுள்ள தெருக்கள் முதல்கட்டமாக சீல் வைக்கப்பட்டு சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக சென்று யாருக்காவது சளி, காய்ச்சல் இருக்கிறதா? என ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். அவர் வசித்து வந்த பகுதி முழுவதும் அரசின் தீவிர கண்காணிப்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.