நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்திலும் திமுக கூட்டணி அதிக வார்டுகளில் முன்னிலை வகித்து வருகிறது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக முன்னிலையில் உள்ளது. 138 நகராட்சிகளில் திமுக கூட்டணி 131 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பேரூராட்சிகளை பொறுத்தவரையில் திமுக கூட்டணி 394 இடங்களில் திமுகவும், 17 இடங்களில் அதிமுகவும் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இந்த தேர்தலில் தனியாக போட்டியிட்ட பாஜக எதிர்பார்க்கப்பட்டது போலவே பல இடங்களில் படுதோல்வி அடைந்துள்ளது. சில இடங்களில் மாநகராட்சி வார்டுகளில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் ஒன்றை இலக்கத்தில் வாக்குகளை பெற்ற சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. குறிப்பாக, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சியில் 11 வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஒரு வாக்கு மட்டுமே பெற்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருந்தும், அவர்கள் யாரும் இவருக்கு வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.