பா.ஜ.க. காலப்போக்கில் மாநில கட்சியாக மாறிவிடும் என அதிமுக எம்பியும், பாராளுமன்ற துணை சபாநாயகரமான தம்பிதுரை கூறியுள்ளார்.
கரூர் மாவட்டம் கடவூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
கர்நாடகத்தில் காங்கிரசும், பா.ஜ.க.வும் போட்டி போட்டுக் கொண்டு அரசியல் செய்கிறார்கள். பாராளுமன்ற தேர்தல் வருவதால் மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் இடம் இல்லாததால் அரசியல் நோக்கத்துடன் பார்க்கிறார்கள். தமிழகத்தில் தமிழ் உணர்வு, திராவிட உணர்வு மேலோங்கியுள்ளது. தேசிய கட்சிகளுக்கு இங்கு இடம் இல்லாத நிலை இருக்கிறது. எனவேதான் புறக்கணிக்கிறார்கள்.
ஒவ்வொரு மாநில மொழியையும், கலாசாரத்தையும் மதித்து மத்திய அரசு நடக்க வேண்டும். அவர்களுக்கு செல்வாக்கு உள்ள மாநிலங்களில் உதவி செய்கிறார்கள். அதிகம் நிதி தருகிறார்கள். இது வருந்தத்தக்கது. இந்தியா ஒற்றுமையாகதான் இருக்கிறது. அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது.
தேசிய கட்சிகள் அரசியல் விருப்பு வெறுப்புகளை காண்பிப்பதால் மாநில உணர்வுள்ள கட்சிகள் வளர்ந்து வருகின்றன. தேசிய கட்சியான காங்கிரஸ் இப்போது 2 மாநிலங்களில்தான் ஆளுகிறது. அது மாநில கட்சியாக மாறும் நிலைமை இருக்கிறது. பா.ஜ.க.வும் காலப்போக்கில் மாநில கட்சியாக மாறிவிடும். இவ்வாறு கூறினார்.