புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது அலி. அதேபகுதியில் உள்ள வயல் பகுதியில் வீடு கட்டுவதற்காக அனுமதி பெற்று கட்டிடம் கட்டியுள்ளார். பின்னர் தனது மனைவி பெயரில் அறக்கட்டளை தொடங்கி, அதற்கான அலுவலகம் என்று பெயர் பலகையும் வைத்திருந்தார்.
மேலும் கட்டிடம் கட்டுமானப் பணியின் போது கட்டிடத்தின் முகப்பில் பள்ளிவாசல்களில் அமைக்கப்படுவது போல மனோராக்கள் அமைத்து வருவதால், வீடுகட்ட அனுமதி பெற்று வழிபாட்டு தலம் கட்டுவதாகக் கூறி கட்டிடத்தின் முகப்பில் உள்ள மனோராக்களை அகற்ற வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதி பா.ஜ.க வினர் போராட்டம் அறிவித்த நிலையில் வருவாய் துறை, ஊரக உள்ளாட்சி துறை, காவல் துறை அதிகாரிகள் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தையில் மனோராக்களை 2021 டிசம்பருக்குள் அகற்ற உறுதியளிக்கப்பட்டு எழுதிக் கொடுத்துள்ளனர். ஆனால் தற்போது வரை மனோராக்கள் அகற்றப்படவில்லை அவற்றை அகற்ற வேண்டும் என்று கடந்த மார்ச் 4- ஆம் தேதி பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தலைமையில் மழைமாரியம்மன் கோயிலில் இருந்து பா.ஜ.க வினர் ஊர்வலமாகச் சென்று முற்றுகை போராட்டம் நடத்த முயன்ற போது சாலையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அதன் பிறகு சாலையிலேயே நடந்த பேச்சுவார்த்தையில் ஏப்ரல் 12- ஆம் தேதிக்குள் கட்டிட உரிமையாளரே மனோராக்களை அகற்றிக் கொள்ள கேட்டுக் கொள்வது, அகற்றத் தவறினால் ஏப்ரல் 13- ஆம் தேதி அதிகாரிகள், காவல்துறையினர் முன்னிலையில் மனோராக்களை அகற்றுவதாக அதிகாரிகள் முன்னிலையில் ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா எழுதிக் கொடுத்தார். அதன் பிககே சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்த போராட்டத்திற்கு வந்திருந்த பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளைப் பற்றி அவதூறாக பேசியதால் அதனால் ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் 6- ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்திருந்தார்.
அதேபோல இன்று மேற்பனைக்காடு ஜமாத் நிர்வாகத்தினர் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதேபோல கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஹெச்.ராஜா மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அதனால் தற்போது நடவடிக்கை இல்லை என்றால் போராட்டங்கள் நடத்தப்படும் என்றனர். பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா மீது அடுத்தடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்படும் நிலையில் வழக்கு பதிவு செய்வது குறித்து காவல் உயர் அதிகாரிகள் சம்பவதன்று எடுக்கப்பட்ட வீடியோக்களை ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் ஹெச்.ராஜா மீது கீரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.