தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல். முருகன், மத்திய இணை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றிருக்கும் நிலையில், தமிழ்நாடு பாஜகவின் துணைத் தலைவராக இருந்த அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விரைவில் அவர் தமிழ்நாடு பாஜக தலைவராக பதவியேற்க உள்ளார். நேற்று (14.07.2021) கோவை வழியாக பயணத்தை தொடங்கிய அண்ணாமலைக்கு, சென்னை வரும்வரை ஒவ்வொரு இடமாக வரவேற்பளிக்க தமிழ்நாடு பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி கோவையில் நேற்று அவருக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.
இந்நிலையில், இன்று திருச்சி வந்த அண்ணாமலையை பட்டாசு வெடித்து வரவேற்க பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்தபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், பட்டாசு வெடித்த பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதேபோல் கடந்த 9ஆம் தேதி கரூரில் பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதை அடுத்து பாஜகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடியபோது, காரில் சென்ற கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், பாஜக பட்டாசு வெடிக்க அனுமதி பெற்றுள்ளதா என கேட்க, பட்டாசு வெடிக்க அனுமதி பெறாவிடில் பாஜகவினரைக் கைது செய்யும்படி போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து, “திமுக வெற்றிபெற்றபோது அனுமதி பெற்றா பட்டாசு வெடித்தனர்” எனக் கேட்டு போலீசுடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.