மதசார்பின்மை, ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றம், சுற்றுச்சூழல், விவசாயம் என பேசப்படவேண்டிய விஷயங்கள் சமீபமாக பேசப்பட்டு வருகின்றன. இது மகிழ்ச்சி. அதே நேரம் முக்கியமான விஷயமான பெண்கள் பாதுகாப்பு, உரிமை பேசப்படவேண்டியதாக, சமீபகாலமாக ஆரோக்கியமாக பேசப்படாமல் இருக்கிறது. பல காலமாக இது பேசப்பட்டாலும் பெரும்பாலும் ஆவேச பேச்சாகவே இருந்திருக்கிறது. அதை ஆரோக்கியமாக பேச ஒரு கருத்தரங்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
பில்ரோத் மருத்துவமனை சார்பில் எழும்பூரில் உள்ள 'ராடிசன்' ஹோட்டலில் 'மை கேர்ள் மை பிரைட்' (My Girl, My Pride) கருத்தரங்கம் நாளை (14 ஆகஸ்ட் 2018) மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகையும் இயக்குனருமான ஸ்ரீப்ரியா, திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குனருமான அறிவழகன் வெங்கடாசலம், ஃபென்சிங் விளையாட்டில் உலகளவில் முதல் 50 இடங்களுக்குள் இருக்கும் பவானி தேவி, மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ வல்லுநரான வி. ரஜினி, நேச்சுரல்ஸ் ஸ்பா மற்றும் சலூனின் தலைமை செயல் அலுவலர் சி.கே. குமரவேல் ஆகியோர் பங்கேற்று விவாதிக்கின்றனர்.
பெண்களின் பாதுகாப்பு, பொருளாதார தற்சார்பு, கல்வி, ஆரோக்கியம் உள்பட பல பரிமாணங்களில் தற்போதைய நிலை குறித்தும் நிகழ வேண்டிய மாற்றங்கள் குறித்தும் பங்கேற்பவர்கள் பேசவிருக்கின்றனர். நிகழ்வில் பேசும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் பெண்கள் உரிமைக்காக பங்களித்துள்ளனர். நடிகை ஸ்ரீப்ரியா தொடர்ந்து பெண்கள் உரிமை, முன்னேற்றம் போன்ற விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருபவர். மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பில் செயலாற்றுபவர். இயக்குனர் அறிவழகன் தனது குற்றம் 23 திரைப்படத்தின் மூலம் சில செயற்கை கருவுற்றல் மையங்களின் மோசடிகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர். அவரது திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்கள் தங்களுக்குரிய கண்ணியத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கும். பவானி தேவி, ஃபென்சிங் எனப்படும் வாள்வீச்சு போட்டியில் உலக அளவில் தொடர்ந்து முதல் 50 இடங்களுக்குள் இருப்பவர், மருத்துவர் ரஜினி பில்ரோத் மருத்துவமனையின் கருத்தரிப்பு மைய தலைவர். குழந்தையின்மையை ஒரு பெரும் குறையாக உருவாக்கம் செய்து பெண்களை குற்றவுணர்வுக்கு ஆளாக்கி வியாபாரம் செய்யும் பல மருத்துவர்கள் மத்தியில் அதை எளிதாக்கி, தேவையான சிகிச்சை முறைகளை மட்டும் செய்து ஒரு வழிகாட்டியாக திகழ்பவர். கீர்த்தி ஜெயக்குமார், ஒரு பெண்ணுரிமை செயல்பாட்டாளர், எழுத்தாளர். நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான (CEO) சி.கே.ஜெயக்குமார் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு சுய தொழில் தொடங்கும் வாய்ப்பை தன் நிறுவனம் மூலம் அளித்துள்ளவர்.
"இவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பேசும் இந்தக் கருத்தரங்கு இதோடு நின்றுவிடாது, அடுத்தடுத்த செயல்பாடுகளை நோக்கி நகரும். பெண்கள் உரிமை. அதிகாரம் குறித்து இப்பொழுதே சத்தமாக, ஆக்கபூர்வமான முறையில் பேசத் தொடங்கவேண்டும். பெண்கள் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குள்ளாகி வரும் நிலையில் இது மிகவும் அவசியம். நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்" என்கிறார் பில்ரோத் மருத்துவமனையின் தலைமை செயல் அலுவலரான (CEO) மருத்துவர் கல்பனா ராஜேஷ். இவர் மகப்பேறு மையங்கள் என்ற பெயரில் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் சில நிறுவனங்களின் தாக்கத்தைக் கண்டு, அதை எளிதாக்க 'அதித்ரி' என்ற கருத்தரிப்பு மையத்தை தொடங்கியுள்ளார். அதித்ரி மையத்தின் தொடக்க விழாவில் பில்ரோத் மருத்துவமனை மேலாண் இயக்குனர் மருத்துவர் ராஜேஷ் ஜெகநாதன் பேசியது நெகிழ்ச்சி தரும் உரை.
ஆம், பேசப்பட வேண்டும்... பேசப்படும் விஷயங்கள்தான் செயல்பாடாக மாறும். எத்தனையோ விஷயங்கள் சமீபமாக பேசப்பட தொடங்கியுள்ளன. மிக மிக அவசியமான பெண்கள் பாதுகாப்பு, உரிமை, அதிகாரம்... இவையும் பேசப்படவேண்டும். பேசுபவர்களுக்கு வாழ்த்துகள்.