கடலூர் மாவட்டம், சிதம்பரம் ரயில் நிலையத்தில் இருப்பு பாதை காவல் ஆய்வாளர் அருண்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர் தனசேகரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், தலைமை காவலர் பாஸ்கர், தனிப்பிரிவு காவலர் கோபால் மற்றும் காவலர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் விரைவு ரயிலில், தடைச் செய்யப்பட்ட பொருட்களான பான் மசாலா, குட்கா, கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது, டி2 கோச்சில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஜாம்ஜெட்அலாம் (வயது 24) விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சாவூருக்கு பயணம் செய்தார். அவரையும், அவரது உடமைகளையும் சோதனை செய்த போது மூட்டையாக 36 பாக்கெட்டுகளில் சுமார் 12.5 கிலோ போதைப்பொருள் இருந்ததைக் கைப்பற்றிய காவல்துறையினர், அந்த இளைஞரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி, வழக்குப்பதிவு செய்து, பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.