திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கவிழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் முன்னிலை வகித்தார்.கல்லூரியின் முதல்வர் விஜயராணி வரவேற்புரையாற்றினார் .விழாவிற்கு தலைமை ஏற்று உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு ரூ.37 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கியுள்ளார். உயர்கல்வித்துறை மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொப்பம்பட்டி ஒன்றியம் மேட்டுப்பட்டியில் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். தற்போது மாணவ, மாணவிகளின் போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டு 17.08.2022 முதல் ஒட்டன்சத்திரம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் இயங்கி வருகிறது. விரைவில் இக்கல்லூரி சொந்த கட்டிடத்தில் இயங்கும். அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.
காளாஞ்சிபட்டியில் சிவில் சர்வீஸ் பயிற்சி மையம் தொடங்கப்படும். இம்மையத்தில் திறன் பெற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வில் பெற்றவர்கள் வரவழைத்து, தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படும். இதிலேயே ரூ.75 லட்சம் செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய நூலகம் அமைக்கப்படும். கேதையுறும்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும், பழனியில் சித்தா கல்லூரி அமைக்கப்படும்'' என்று கூறினார்.
இந்த விழாவில் நகர்மன்ற துணைத் தலைவர் வெள்ளைச்சாமி, கோட்டாட்சியர் சிவகுமார், மாவட்ட அவைத்தலைவர் மோகன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன், தங்கராஜ், சுப்பிரமணி உள்பட கட்சிப் பொறுப்பாளர்கள், அதிகாரிகள் பெரும்திரளாக கலந்து கொண்டனர்.