Skip to main content

முழு கொள்ளளவை நெருங்கும் பவானிசாகர்

Published on 31/07/2024 | Edited on 31/07/2024
nn

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை.105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இதேபோல் பில்லூர் அணையிலிருந்தும் உபரி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 969 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 92.26 அடியாக அதிகரித்து உள்ளது.குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடியும்,  கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 700 கன அடியும், காலிங்கராயன் பாசனத்திற்கு 400 கன அடியும் என மொத்தம் 1,205 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.77 அடியாக உள்ளது. இதேபோல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 25.10 அடியாக உயர்ந்து உள்ளது. ஈரோடு மாவட்ட முக்கிய அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்