தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் இயங்கும் ராஜா மேல்நிலைப்பள்ளியில், 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கீழ ஈராலை சேர்ந்த தலித் மாணவர்கள் 4 மாணவர்கள், இந்த ஆண்டு பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்தனர். ஏற்கனவே படித்த பள்ளியில் ஒன்றாக இருந்ததால், இந்த பள்ளியிலும் ஒன்றாகவே சுற்றித் திரிந்ததாக தெரிகிறது. இதற்கு மாற்று சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வாக்குவாதம், கை கலப்பில் முடிந்தது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட தலித் மாணவர்கள் தங்களது பெற்றோரிடம் கூறியிருக்கின்றனர். இதையடுத்து, அந்த மாணவர்களின் பெற்றோர் சனிக்கிழமை வந்து தலைமை ஆசிரியர் முத்துக்குமாரிடம் முறையிட்டுள்ளனர். தலைமை ஆசிரியரோ தாம் விசாரிப்பதாக கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்திருக்கிறார். தலைமை ஆசிரியரும், சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து பேசியிருக்கிறார். இதையடுத்து, மீண்டும் ஆவேசம் அடைந்த அந்த மாணவர்கள், தலித் மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. இந்த பிரச்சனை வீரியமடைந்ததை உணர்ந்த வருவாய்த் துறையினர், இரு தரப்பையும் அழைத்து பேசி இருக்கிறது. மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால், இருதரப்பும் சமாதானமாக செல்லும்படி அறிவுறுத்தியது. இனிவரும் காலங்களில் மோதலை தடுக்க கண்காணிப்பு குழு அமைப்பது என்றும், பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவது என்றும் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
"சாதிகள் இல்லையடி பாப்பா..
குலம் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்..." என்று மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய பாரதியார் படித்த பள்ளியில் தான் இந்த கொடுமை! இன்று அவரது 97-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.