அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி எம்.பி., 'இந்திய ஒற்றுமை' என்ற தலைப்பில் நடைப்பயணத்தை தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி, பல்வேறு மாநில மாநிலங்கள் வழியாக, ஜம்மு- காஷ்மீருக்கு சென்று கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள பால நகரில் 56வது நாள் இந்திய ஒற்றுமைப் பயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். அவருடன் இணைந்து ம.தி.மு.க.வின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, சுமார் இரண்டரை மணி நேரம் நடைப்பயணம் மேற்கொண்டார்.
இது குறித்து துரை வைகோ தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், "குமரி முதல் காஷ்மீர் வரை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை சகோதரர் ராகுல்காந்தி, 'பாரத் ஜோடோ யாத்ரா' என்ற பெயரில் செப்டம்பர் 7- ஆம் தேதி அன்று கன்னியாகுமரியில் தொடங்கி, மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ கடந்து காஷ்மீர் வரை, இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.
இன்று ஹைதராபாத்தில் தொடங்கிய பயணத்தில் பங்கேற்று, நடைபயண நாயகர் இயக்கத் தந்தை அன்புத் தலைவர் வைகோ அவர்களின் சார்பிலும், மறுமலர்ச்சி தி.மு.கழகம் சார்பிலும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தேன். காலை 06.00 மணிக்கு தொடங்கி 08.00 மணி வரை, 2 மணிநேரம் ராகுல் காந்தியுடன் 9 கி.மீ நடைபயணமாக சென்றேன். அப்போது, கிட்டத்தட்ட அரை மணிநேரம் அவருடன் உரையாடிக்கொண்டே வந்தேன். நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரி ஜோதிமணியும் உடன் வந்தார்.
காலை 08.00 மணி வரை தொடர்ந்த நடைபயணம் முடிந்த பிறகு, ராகுல் காந்தியும், நானும் காலை உணவருந்தினோம். ராகுல் காந்தி ஐந்து நிமிடத்தில் காலை உணவை முடித்துக் கொண்டார். அதன்பிறகு, அவருடன் 45 நிமிடங்கள் உரையாடிக்கொண்டு இருந்தேன். என்னைப் பற்றியும், நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு செய்து கொண்டு இருந்த பணிகளைப் பற்றியும் விசாரித்தார். வைகோவின் உடல்நலன் குறித்து மிகுந்த அக்கறையுடன் கேட்டு அறிந்தார்.
தமிழக அரசியல் நிலவரம், தேசிய அரசியல் உள்ளிட்டவைகள் குறித்து உரையாடினோம். தற்போது, உலகம் முழுவதும் தாக்கம் செலுத்தி வரும் வலதுசாரி அரசியலின் பேராபத்து குறித்து, எனது கருத்தை அவரிடம் தெரிவித்தேன். வலதுசாரி அரசியலை வீழ்த்துவதற்கு நடைமுறையில் உள்ள சவால்கள் குறித்து நான் அவரிடம் பகிர்ந்து கொண்டேன். கடந்த பத்து வருடங்களில் சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்ததற்குப் பிறகு, வலதுசாரி அரசியல் கட்சிகள் வேகமாக வளர்ந்து உள்ளன.
நம்மை பொறுத்தவரை நாட்டின் முன்னேற்றம், ஒற்றுமை, வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வோம். ஆனால், வலதுசாரிகள் சாதி, மத உணர்வுகளை மக்களிடம் தூண்டி அதன் மூலம் வெற்றி பெறுகின்றார்கள். அவர்களை வீழ்த்துவது ஒரு சவாலான பணி என்று அவரிடம் தெரிவித்தேன்.
இலங்கை முன்னாள் அதிபர் இராஜபக்சே குறித்து பேச்சு எழுந்த போது, அவர் மிக மோசமான கொடுங்கோலன் என்று ராகுல்காந்தி தெரிவித்தார். உடனே அவரிடம் கைகுலுக்கி அவரது கருத்தை நானும் ஆதரித்தேன்.
பிரேசில் தேர்தலில் போல்சார்னோவின் தோல்வி குறித்து எனது கருத்தை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். உலகம் முழுவதும் ஹிட்லராக இருந்தாலும், இராஜபக்ஷேவாக இருந்தாலும், ட்ரம்பாக இருந்தாலும், போல்சர்னோவாக இருந்தாலும் வலதுசாரி சிந்தனை உடையவர்கள், இனவாத, மதவாத அரசியலை முன்னெடுத்தவர்கள் வீழ்ந்து போன வரலாறை சகோதரர் ராகுல் காந்தி என்னிடம் தெரிவித்தார்.
இந்தியாவில் வலதுசாரிகளின் கை ஓங்கி இருந்தாலும் கடைசி நம்பிக்கையாக தகர்க்க முடியாத கற்கோட்டையாக தெற்கே தமிழகம் தான் இருக்கிறது என்று, ராகுல்காந்தி அவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தார். தந்தை பெரியாரை போன்றே பகுத்தறிவு கருத்துக்களை அவர் காலத்திற்கு முன்பே பரப்பி வந்த சிந்தனையாளர்கள் குறித்தும் ராகுல் காந்தி என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
அண்ணல் காந்தியார் தொடங்கி நாட்டின் ஒற்றுமைக்காக பல தலைவர்கள் நடைபயணம் சென்று மக்களை அணி திரட்டி இருக்கின்றார்கள். அதில் வெற்றியும் பெற்று இருக்கின்றார்கள். இன்று, மதவாத சக்திகள் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்து பிளவுபடுத்தி வரும் நிலையில், இந்திய நாட்டில் எட்டுத் திக்கிலும் நம்பிக்கையை ஏற்படுத்தி வரும் தலைவராக, நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து வரும் காங்கிரஸ் பேரியக்கத்தின் நம்பிக்கைக்குரிய தலைவர் சகோதரர் ராகுல் காந்தியின் 'ஒற்றுமை பயணம்' வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்
அவரது முயற்சியும், நடைபயணத்தின் குறிக்கோளும் வெற்றி பெறட்டும். இந்த சந்திப்பை ஏற்படுத்தித் தந்த நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரி ஜோதிமணிக்கு நன்றி. இந்நிகழ்வில், என்னோடு வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் ஆகியோர் பங்கேற்றார்." இவ்வாறு துரை வைகோ தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.