ஊசிலம்பட்டி போன்ற பகுதிகளில் நிலவும் சிசுக்கொலைகள் தொடர்ந்து தென் மாவட்டத்திலும் பரவிவருகிறது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலின் அருகில் அமைந்திருக்கும் தியேட்டர் ஒன்றின் அருகில் உள்ள மைதானத்தில் இன்று (9/9/20) அதிகாலை மூன்று மணியளவில் இரண்டு பேர் ஏதோ ஒன்றை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துச் சென்றனர். அந்தப் பக்கமாக காலைக் கடன் கழிக்க வந்தவர்கள் அதைப் பார்த்து போலீசுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். விரைந்து வந்த போலீசார் எரிந்த தீயை அணைத்தபோது, உடல் பாதி எரிந்து உயிரற்ற நிலையில் கிடந்த பிறந்த சிசுவைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிறகு, அந்த சிசுவின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின் முதற்கட்ட தகவல்படி, அந்தப் பக்கம் உள்ள தெருவின் சங்கரகோமதி (22) என்ற பெண்ணுக்கு இரண்டு நாள் முன்பு பிரசவமாகி ஆண் குந்தை ஒன்று பிறந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. திருமணம் ஆகும் முன்பே கள்ளத் தொடர்பால் பிறந்த குழந்தை, வெளியே தெரிந்தால் அவமானம் என்பதால் சிசுவின் தாய் சங்கரகோமதியும் அவரது தாய் இந்திராணியும் சேர்ந்து அதிகாலை மூன்று மணியளவில் அந்தப் பக்கம் உள்ள தியேட்டரின் காம்பவுண்ட் பக்கம் எரித்துக் கொன்றது தெரியவந்திருக்கிறது. சங்கரகோமதி, தாய் இந்திராணி அவர் கணவர் சண்முகவேல் மூவரையும் விசாரணைக் கஷ்டடிக்குள் கொண்டுவந்த போலீசார், தாய் சங்கரகோமதியை மகப்பேறு வார்டில் சிசிக்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஸ்பாட்டிலிருந்த மாவட்ட எஸ்.பி.யான சுகுணாசிங் பேசுகையில், “சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்தப் பெண் மகப்பேறு வார்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சிகிச்சை முடிந்தபின் மேல் விசாரணை செய்யப்படும்” என்றார். தாயே பெற்ற குழைந்தையை எரித்துக் கொன்றது நகரைப் பரபரப்பாக்கியிருக்கிறது.