தென்காசி மாவட்டம் கருத்தலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வைகுண்டமணி. இவர் கடந்த 6 ஆம் தேதி சிவசைலத்தில் இருந்து பெத்தான்பிள்ளை என்ற கிராமத்திற்கு மசாலா பொருட்களை வியாபாரத்திற்காக இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றுள்ளார். வனப்பகுதியின் நடுவிலான சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென குறுக்கே வந்த ஒற்றை கரடி இருசக்கர வாகனத்தை கீழே தள்ளியதோடு வியாபாரி வைகுண்டமணியை கடித்துக் குதறியது.
அப்போது அந்தப் பகுதிக்கு வந்த கிராம மக்கள் கரடியை விரட்டி விட முயன்ற நிலையில், நாகேந்திரன், சைலப்பன் என்ற இருவரையும் அந்த கரடி கடித்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கரடி தாக்கியதில் படுகாயமடைந்த மசாலா வியாபாரி வைகுண்டமணி, நாகேந்திரன், சைலேந்திரன் ஆகிய மூன்று பேரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து வனத்துறையின் முயற்சியால் பிடிக்கப்பட்ட கரடியானது உயிரிழந்தது. இந்நிலையில், மீண்டும் ஒரு கரடியானது குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். இதனால் கரடியைப் பிடிப்பதற்காக சுமார் 45-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் பெத்தான்பிள்ளை கிராமத்தைச் சூழ்ந்துள்ளனர். பழங்களைக் கூண்டிற்குள் வைத்தும், அதிக ஒலி எழுப்பியும், தீப்பந்தங்கள் போன்றவற்றை பயன்படுத்தியும் கரடியை பிடிக்கும் முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியே அச்சத்தில் உறைந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.