தேசத்திற்கே சவாலாக நிற்கும் கொடூர கரோனாவை எதிர்த்துப் போராடவும், அதன் தாக்குதலைச் சமாளித்து தற்காத்துக் கொள்ளவும் மார்ச் 22 அன்று இந்தியா முழுவதிலும் சுய ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது மத்திய அரசு. மேலும் அத்யாவசியப் பொருட்கள் கிடைக்கும். நாட்டு மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் சூழலைச் சுட்டிக்காட்டி அறிவுறுத்தப்பட்டது. அன்றைய தினம் மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக சுய ஊரடங்கை முழுமையாகப் பின்பற்றினர்.
ஆனாலும் ஒரு சில இடங்களில் அவசர கால நிலையைக் கருத்தில் கொள்ளாமல் அத்துமீறல்கள் நடந்தன. நெல்லை மாவட்டத்தின் முக்கூடல் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எஸ்.ஐ. செல்வராஜ் தலைமையிலான போலீசார் கரோனா பரவாமல் தடுக்கும் பணியில் குழுவாகச் செயல்பட்டு கண்காணித்தனர். மக்கள் அதிகம் கூடும் பகுதிகளைக் கண்காணித்து அவர்களை கூடவிடாமல் தடுத்தும், முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் வாரச்சந்தை மற்றும் தாமிரபரணி ஆற்றுப் பகுதியிலும் ரோந்துப் பணிகளை மேற்கொண்டனர்.
அப்போது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சுய ஊரடங்கை மீறி, ஆற்றில் உற்சாகக் குளியல் போட்டும், சிலர் கரையில் அமர்ந்தபடி பேசிக்கொண்டு இருந்தனர். உடனடியாக அவர்களை வரவழைத்தும், குடும்பமாக வந்தவர்களை எச்சரித்தும் அனுப்பினர். அது சமயம் 30க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களை அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினர். சிலருக்கு தலா ரூ. 100 அபராதம் விதித்தும் அனுப்பிவைத்தனர். போலீசாரின் அறிவுறுத்தலையடுத்து முத்துமாலை அம்மன் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பூஜைகள் மட்டுமே நடந்துவருகிறது.