திண்டுக்கல் அருகே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
.
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு அருணா மீனாட்சி நகரில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு விநியோகம் செய்து வருவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது .அதை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அதிகாரியான நடராஜன் தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரமோகன் உள்பட சில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் தாடிக்கொம்பு போலீசாருடன் திடீரென மீனாட்சி நகரில் உள்ள சங்கர் வீட்டை சோதனை செய்தனர்.
அப்போது அந்த வீட்டில் அரை டன் எடையுள்ள சுமார் ரூ 5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. அதை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது சம்மந்தமாக உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அதிகாரியான நடராஜனிடம் கேட்டபோது, “சங்கரின் உறவினரான தாடிக்கொம்பு வடக்கு தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவர் இந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சில்லறை விற்பனை செய்து வந்து இருக்கிறார் என்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறோம். அதோடு பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மாதிரிகளை சோதனைக்கு அனுப்பிவைக்க இருக்கிறோம்” என்று கூறினார்.