திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வடமதுரையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அதே பகுதியைச் சேர்ந்த உமாபதி சேமிப்புக் கணக்கினை வைத்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் ஏடிஎம் அட்டை தொலைந்து விட்டதால் வங்கி மேலாளரிடம் தனக்கு புதிய ஏடிஎம் அட்டை வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதற்கு வங்கி மேலாளர் அதிகாரத் தொனியில் பேசும் வீடியோ காட்சி இணையதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அந்த வீடியோ காட்சியில் வங்கி மேலாளர் “வேலை பொறுமையாகத்தான் நடக்கும் காத்திருக்க முடிந்தால் காத்திருங்கள் இல்லை என்றால் கிளம்புங்கள். சொல்லக்கூட வேணாம். நீங்கள் கிளம்பி சென்றுகொண்டே இருக்கலாம்” எனக் கூறுகிறார்.
வாடிக்கையாளர் உமாபதி, “ஊருக்குப் போகணும் சார்...” என்று கூற, உடனே வங்கி மேலாளர் “பண்ண முடியாது என்று சொல்லும் அளவுக்கு பண்ணாதீங்க. நீங்கள் ஊருக்குச் செல்லுங்கள். கூகுள் பே, போன் பே மூலம் பண்ணிக்கோங்க. எதுக்கு ஏடிஎம். கணக்குல எவ்வளவு பேலன்ஸ் இருக்கு தெரியுமா? என்னையா டிரான்சாக்ஸன் வெங்காய டிரான்சாக்ஸன். ஒரு பைசா இருக்காது. அத வச்சு என்ன செய்யப் போற நீ. மினிமம் பேலன்ஸ் 500 மெயிண்டெயின் பண்ணாதவங்களுக்கு எதுக்கு ஏடிஎம். பெரிய டிரான்சாக்ஸன் பண்ணிட்டீங்க. காசே இல்லாத அக்கவுண்டுக்கு ஏடிஎம் என்ன அவசரம். ஆள் இல்லன்னு சொல்றேன் புரியல. உட்கார்ந்திருந்து வாங்கிட்டுப் போங்க. இல்லன்னா போய்க்கிட்டே இருங்க. ஒரு ஆள்தான் இருக்குன்னு சொன்னா புரியாதா” என அதிகாரத் தொனியிலேயே பேசுகிறார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.