கோழிப்பண்ணை அமைத்ததாக கூறி போலி ஆவணங்கள் தயாரித்து வங்கியில் ரூ.33 கோடி மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை, திருச்சி ரோட்டில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது . இந்த வங்கியில் லட்சுமி பிரகாஷ்(45) என்பவர் பொது மேலாளராக உள்ளார். இவர் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதில் வங்கியின் முன்னாள் மேலாளர் தூத்துக்குடி மாவட்டம் சிறு தொண்ட நல்லூரை சேர்ந்த சிவசுப்பிரமணியம்(55), உட்பட 4 பேர் , வங்கியில் ரூ. 33 கோடி மோசடியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த 2018 19 ஆம் ஆண்டுகளில் வங்கியில் நடந்த கணக்கு தணிக்கையின்போது தெரியவந்ததுள்ளது. மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
அதன்பேரில் உதவி கமிஷனர் சௌந்தர்ராஜன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த புரோக்கர் மகேஷ் (41), கட்டுமான தொழில் செய்துவரும் சூலூர் பாண்டியன் (44), கோழிப்பண்ணை நடத்தி வரும் செலக்கரிச்சல் சேர்ந்த கோமதி(42) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து சூலூர், பல்லடம், கரடிவாவி ஆகிய பகுதிகளில் கோழிப்பண்ணை அமைக்க இருப்பதாக கூறி கோவை திருச்சி ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்து உள்ளனர்.
அப்போது வங்கி மேலாளராக இருந்த சிவசுப்பிரமணியன் நிலத்தின் மதிப்பை உயர்த்தி காட்டி பல மடங்கு கடன் கொடுத்து உள்ளார். மேலும் இல்லாத நிலத்துக்கும் போலி ஆவணங்கள் தயாரித்து கடன் கொடுத்துள்ளார். அந்த வகையில் 4 பேரும் ரூ. 33 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதற்கு வங்கி மேலாளர் சிவசுப்பிரமணியம் மூளையாக செயல்பட்டுள்ளார். அதன்பேரில் ஏமாற்றுதல் , கூட்டு சதி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வங்கி மேலாளர் சிவசுப்பிரமணியம், மகேஷ், பாண்டியன், கோமதி உள்ளிட்ட 4 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.