கடலூர் மாவட்டம் சிதம்பரம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் வளர்மதி. இவர் சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்துள்ளார். அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ. 60 ஆயிரம் திடீரென மாயமானது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வங்கியின் முதன்மை மேலாளர் ஸ்ரீ ராமன் என்பவரிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வளர்மதியின் வங்கி கணக்கை சரிபார்த்த போது அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ 60,000 இரண்டு தவணையாக அதே வங்கியில் பணிபுரியும் சிதம்பரம் காந்தி நகரை சேர்ந்த அசோக்குமார் மகன் சந்தோஷ்குமார் என்பவர் கணக்கிற்கு சென்றுள்ளது. எனவே இவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது., இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போது அதே வங்கியில் கணக்கு வைத்துள்ள அன்புக்கரசு கணக்கிலிருந்து ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம், கலா என்பவர் கணக்கில் ரூபா 90 ஆயிரம், கலைச்செல்வி என்பவர் கணக்கிலிருந்து ரூபா 59 ஆயிரத்து 900, ராஜதுரை என்பவர் கணக்கிலிருந்து ரூபாய் 50 ஆயிரம் என ஐந்து வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ரூபாய் 5 லட்சத்து 9 ஆயிரத்து 900 பணத்தை நூதன முறையில் கொள்ளை அடித்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வங்கியின் மேலாளர் சிதம்பரம் காவல்துறையில் புகார் அளித்தார் அதன் பேரில் சந்தோஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். விசாரணையில் சந்தோஷ் குமார் பிஇ., ஐடி. படித்துவிட்டு வங்கியில் கிரெடிட் கார்டு பிரிவில் வேலை செய்து வருகிறார். கிரடிட் கார்டு சம்பந்தமாக வரும் வாடிக்கையாளர்களிடம் தொலைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு எண்களை பெற்று சரி பார்க்கிறேன் என்ற முறையில் பணத்தை நூதனமுறையில் மோசடி செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. வங்கி ஊழியரே வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து பணத்தை கொள்ளையடித்தது வ்ங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இவருக்கு ஆன் லைன்மூலம் வங்கி கணக்கில் திருடும் கும்பலுடன் தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகம் வங்கி அதிகாரிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் எழுந்துள்ளது.