Skip to main content

கோடை மழையால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளின் வாழ்க்கை!

Published on 29/04/2020 | Edited on 29/04/2020

 

Banana farmers Worried

 

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்கிற பாடல் தற்போது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ விவசாயிகளுக்கு கச்சிதமாக பொருந்துகிறது என்கிறார்கள் விவசாயிகள். கடந்த இரண்டு, மூன்று நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. சூறை காற்று மற்றும் ஆலங்கட்டி மழை என இருவிதமாக பெய்கிறது. ஆலங்கட்டி மழை பெய்யும் போது நெல் பயிர்களை அழித்தது என்றால், சூறை காற்று நெல் பயிரோடு சேர்த்து பல்லாயிரக்கணக்கான வாழைகளையும் அழித்துள்ளது.


திருவண்ணாமலை மாவட்டம் ஜம்னாமத்தூர் பகுதிகள், கலசப்பாக்கம், படவேடு போன்ற பகுதிகளில் பயிர் செய்திருந்த வாழைகள், ஏப்ரல் 28ந்தேதி மாலை மற்றும் இரவு வீசிய சூறை காற்றில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து கீழே விழுந்தன. இதனைப்பார்த்த வாழை விவசாயிகள் கண்ணீரோடு உள்ளனர்.

கரோனா வைரஸ் பரவலால் 144 உத்தரவு போடப்பட்டதால் திருமணம் உட்பட எந்த விசேஷமும் நடைபெறவில்லை. இதனால் வாழை மரங்கள், வாழை இலை போன்றவை விற்பனையாகவில்லை. வாழைக்காய், வாழைப்பழமும் மிகமிக அடிமட்ட விலைக்கு போகின்றன. ஒரு வாழைதார் விலை 100 ரூபாய்க்கும் குறைவாகவே வாங்குகிறார்கள். இதனால் என்ன செய்வது எனத்தவித்து வந்தோம். பட்ட காலிலேயே படும் என்பது போல இப்போது சூறைக்காற்று வீசியதால் மரங்கள் எல்லாம் கீழே விழுந்து 100, 50 கூட வருமானம் இல்லாமல் போய்விட்டது என்கிறார்கள் விவசாயிகள்.

அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் வாழை விவசாயிகள்.


 

சார்ந்த செய்திகள்