நாகப்பட்டினம் அபிராமி சன்னதி தெருவில் இயங்கிவரும் சக்தி நர்சிங் ஹோம் என்கிற தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. எட்டாவது முறையாக பிரசவத்திற்கு வந்த ஒரு பெண் இறந்துபோனதால் பெரும் பரபரப்பானது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் பாத்திமா பீவி. நிறைமாத கர்ப்பிணியான இவரை அவரது உறவினர்கள் நாகை அபிராமி சன்னதி அருகே உள்ள சக்தி நர்சிங் ஹோம் என்ற தனியார் மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்காக நேற்று சேர்த்துள்ளனர். இன்று காலை அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தநிலையில், தாய் பாத்திமா பீவிக்கு ரத்தம் குறைவாக இருப்பதாகவும், அவர் மயக்க நிலையில் இருப்பதாகவும் நீண்ட நேரமாக மருத்துவர் ராகிணி சமாளித்து வந்துள்ளார். பின்னர் சந்தேகம் அடைந்த உறவினர்கள் மருத்துவரிடம் பிரச்சனை செய்தபோது, மாலை 4 மணிக்கு பாத்திமா பீவி இறந்து விட்டார் என்ற செய்தியை மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
இதனைக்கேட்டு ஆத்திரமடைந்த பாத்திமா பீவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களும் என சுமார் 300 க்கும் மேற்பட்டோர் தனியார் மருத்துவமனை முன்பு திரண்டு மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த உறவினர்கள் கற்களை வீசி தனியார் மருத்துவமனையின் மீது தாக்குதல் நடத்தி கண்ணாடி மற்றும் கதவுகளை அடித்து உடைத்தனர். அதனைத்தொடர்ந்து மருத்துவமனை முழுவதும் பொதுமக்களை கட்டுப்படுத்துவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர். இதனால் அந்தபகுதியே பதட்டமானது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நாகை மாவட்ட காவல்துறை இணை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது உயிரிழந்த பாத்திமாபீவியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு தருவதாக மருத்துவமனை நிர்வாகம் உறுதி அளித்ததை தொடர்ந்து சடலத்தை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.
"அடிக்கடி தவறான சிகிச்சை செய்து பலரது உயிரை காவு வாங்கும் தனியார் மருத்துவமனையை உடனடியாக மூட வேண்டும். மருத்துவர்களின் அலட்சியத்தால் பிரசவத்திற்கு வந்தவர்கள் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர், பெண் மருத்துவரான ராகினி குடிபோதையில் மருத்துவம் பார்க்கிறார்," என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.