அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு வழக்கு பல கட்ட விசாரணைக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் கடந்த 18 ஆம் தேதி, “அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம், கொடி ஆகியவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கப்படுகிறது” என அதிரடி தீர்ப்பை வழங்கி இருந்தார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் அந்த மனுவில், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதா இல்லையா என்ற வழக்கு நிலுவையில் உள்ளதால், அந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை தனக்கு கட்சியின் இரட்டை இலை, சின்னத்தையும் கொடியையும் பயன்படுத்த அனுமதியளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது, “அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்க்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது; ஓ.பி.எஸ். இரட்டை இலை, கட்சியின் பெயர் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மேல்மூறையீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தை அணுகத் தடையில்லை என்றும் கூறியுள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை ஜூன் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.