இந்தியா முழுவதும் புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அறிவித்தார். அதில் கையிருப்பில் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள், அதனை அந்த வருடம் டிசம்பர் இறுதிக்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார். இதனால், அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக பல்வேறு இடங்களில் உள்ள வங்கியிலும், ஏ.டி.எம் வாசலிலும் மக்கள் அலைமோதி காத்திருந்தனர். இந்த பணமதிப்பிழப்பை மத்திய அரசு அறிவித்த போது தான், புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதுமட்டுமல்லாமல், புதிய வடிவிலான 200, 100, 50 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்திற்கு வந்தன.
இதனையடுத்து, இந்த வருடம் மே மாதம் 18ஆம் தேதி அன்று புழக்கத்தில் இருந்த புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்யப்பட்டு திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி திடீரென்று அறிவிப்பை வெளியிட்டது. இந்த ரூபாய் நோட்டுகள் பெரிய தொகையாக இருப்பதாலும், அதற்கான சில்லறை வாங்குவதற்கு மிகவும் சிரமம் ஏற்படுவதாகவும் திரும்ப பெறுவதாக கூறப்பட்டது. இது தொடர்பான ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி, இரண்டாயிரம் நோட்டுக்களை மே மாதம் 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்திருந்தது. மேலும், இந்த ரூபாய் நோட்டுக்கள் வருகிற அக்டோபர் 1ஆம் தேதி முதல் செல்லாது எனவும் அறிவிப்பை வெளியிட்டது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் 2000 ரூபாய் நோட்டுக்களை வாங்குவது நிறுத்தப்பட்டது. ஆனாலும், சில அரசுத் துறைகளான மின்வாரியம், பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து வாங்கப்பட்டது.
இந்நிலையில், செப்டம்பர் 30ஆம் தேதியுடன் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்வதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் நாளை முதல் (28-09-23) தமிழக அரசுப் பேருந்துகளில் 2000 ரூபாய் வாங்க வேண்டாம் என அரசு போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. இதில் இன்றும் (27-09-23), 29ஆம் தேதி மற்றும் 30 ஆம் தேதி மட்டும் தான் இந்த வாரத்தில் வங்கிகள் இயங்கும். மேலும், 28ஆம் தேதி இஸ்லாமிய பண்டிகையான மிலாடி நபி வருவதால் அன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, அக்டோபர் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும், அதற்கு அடுத்த நாளான 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியும் வருகிறது. இதனால், பெரு நகரங்களில் வேலை பார்க்கும் பெரும்பாலான மக்கள் இந்த வாரத்தில் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக முன்கூட்டியே பேருந்துகளில் முன்பதிவு செய்துவிட்டு வருகின்றனர். தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் விடுமுறை இருப்பதால், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக 1500 பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை அக்டோபர் 1ஆம் தேதிக்கு மேல் வங்கிகளில் கொடுத்து மாற்ற முடியாது என்ற காரணத்தினால் இத்தகைய அறிவிப்பை அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த அறிவிப்பில், 2000 ரூபாய் நோட்டுக்களை செப்டம்பர் 28ஆம் தேதி முதல் வாங்க வேண்டாமென அனைத்து கோட்ட மேலாளர்கள், கிளை மேலாளர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி ரூபாய் நோட்டுக்களை வாங்கினால் நடத்துநர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டுமெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.