கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடமாக உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியை பாலித்தீன் பொருள்களில் இருந்து பாதுகாக்க மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்படும் எனவும் தெரிவித்த அம்மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், அதற்கான முயற்சியிலும் ஈடுப்பட்டார். ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பாலித்தீன் பொருட்கள் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்ததை அடுத்து ராமேஸ்வரம் பகுதியில் நேற்று முதல் 50% பாலித்தீன் பயன்பாடு குறைந்துள்ளது.
இந்நிலையில் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உணவகங்கள், மளிகைக் கடைகள், பேக்கரிகள், சங்கு விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட இடங்களில் திடீர் ஆய்வை மேற்கொண்டார். அப்போது பாலித்தீன் பைகளுக்கு பதிலாக பேப்பர் கவர்களை உணவகங்கள் மற்றும் பலசரக்கு கடைகளில் பயன்படுத்துவதை கண்டு வியாபாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் பாலித்தீன் கவர்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் விழிப்புணர்வு நோட்டீஸ்களை கொடுத்து ஒட்டுமாறு அறிவுறுத்தினார்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவிக்கும்போது, "ராமேஸ்வரம் பகுதியில் பாலித்தீன் கட்டுப்பாடு என்பது பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளதாகவும், தற்போது கைகள் மற்றும் மாற்று பயன்பாட்டை மக்கள் பயன்படுத்தி வருவதை காண முடிவதாகவும்" தெரிவித்தார். மேலும், "கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடமாக உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியை பாலீத்தின் பொருள்களில் இருந்து பாதுகாக்க மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் தெரிவித்தார்.