Skip to main content

சில்லறைக் கொடுப்பதாகக் கூறி நூதன முறையில் பணத்தை ஏமாற்றிய 'பலே' திருடன் கைது! 

Published on 24/06/2022 | Edited on 24/06/2022

 

 

'Bale' thief arrested for swindling tens of thousands of rupees in retail

 

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் நகரத்தில் உள்ள கடைகளில், கடந்த ஒரு மாத காலமாக, "கோயிலில் உண்டியல் காசு எண்ணப்படுகிறது, சில்லறை வேண்டுமா?" என கடை உரிமையாளர்களிடம் கேட்டு, 5,000 முதல் 10,000 ரூபாய் வரை பணத்தை வாங்கிக் கொண்டு தலைமறைவாகும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.

 

இதுகுறித்து விருத்தாச்சலம் கடைவீதியில் உள்ள துணிக்கடையில், சில்லறை வேண்டுமா? என்று கேட்டு, கடை உரிமையாளரிடம் பேசும் நபரின் சி.சி.டி.வி. வீடியோ காட்சி வெளியாகி, கடை உரிமையாளர்கள் யாரும் ஏமாற வேண்டாம் என சமூக வலைத்தளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இன்று (24/06/2022) சில்லறை திருடன், விருத்தாச்சலம் ஜங்ஷன் சாலையில் உள்ள, தனியார் உணவகத்திற்கு வந்து, வழக்கம் போல், கோவில் உண்டியலில் காசு எண்ணுவதாக கூறி, சில்லரை வேண்டுமா? எனக் கடை உரிமையாளரிடம் கேட்டுள்ளார். 

 

உடனடியாக சுதாரித்துக் கொண்ட கடை உரிமையாளர், சம்பந்தப்பட்ட நபரை விசாரித்தபோது, கடை கடையாக சென்று சில்லறைத் தருவது போல் பணத்தை 'அபேஸ்' செய்து செல்லும் நபர் எனத் தெரிய வந்தது. உடனடியாக சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் விருத்தாசலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்து, அவர்களிடம் ஒப்படைத்தனர். 

 

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட விருத்தாசலம் காவல்துறையினர் முதல் கட்டமாக சம்பந்தப்பட்ட சில்லறை திருடன் நாகப்பட்டினம் மாவட்டம், மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்த நல்லகண்ணு என்பவரின் மகன் சக்திவேல் என்பதும், தனது இருசக்கர வாகனத்தின் மூலம் பல்வேறு ஊர்களுக்கு சென்று, சில்லறை வேண்டுமா என்று கேட்பதுபோல் பல்லாயிரம் ரூபாய் நூதன முறையில் ஏமாற்றியது தெரிய வந்தது. அதையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சார்ந்த செய்திகள்