விழுப்புரம் மாவட்டம் சொரப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவநாதன். இவர் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், அரசுத்துறையில் வேலை பெற வேண்டும் என்பது இவரது எண்ணமாக இருந்து வந்தது. இந்நிலையில் புவனேஷ் என்ற நபர் கடலூர் மாவட்டம் பலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த பக்கிரிசாமி என்ற நபரை தேவநாதனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். மாற்றுத்திறனாளியான பக்கிரிசாமி ரயில்வே துறையில் பணிபுரியும் அதிகாரி எனவும், அவர் பல பேருக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கி கொடுத்துள்ளார் என அளந்துவிட்டுள்ளார்.
இதனை நம்பிய தேவநாதன் எனக்கும், எனது மனைவிக்கும் ரயில்வேயில் வேலை வேண்டும் எனக் கேட்டுள்ளார். கேட்கும் பணத்தை கொடுத்தால் இருவருக்கும் வேலை தயாராகிவிடும் என பக்கிரிசாமி தெரிவித்துள்ளார். இதனை முழுமையாக நம்பிய தேவநாதன், வேலை வாங்கி தருவார் என்ற நம்பிக்கையில் 3 லட்சம் ரூபாயை முதல் தவணையாக கொடுத்துள்ளார். பணம் கொடுக்கப்பட்ட சில தினங்களிலேயே தேவநாதனுடைய மொபைல் போன் மற்றும் அவருடைய மனைவியின் மொபைல் போனுக்கு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் 'நீங்கள் இந்தியன் ரயில்வே துறையில் பணி பெறுவதற்காக பணம் செலுத்தி இருந்தீர்கள். உங்களுக்கான வேலை தயாராகிக் கொண்டிருக்கிறது. மீதமுள்ள தொகையும் கட்டி விட்டால் கோவை கிளையில் வேலை உங்களுக்கு நிச்சயம்' என இருந்தது.
உடனே பக்கிரி சாமியை தொடர்பு கொண்ட தேவநாதன் மகிழ்ச்சியில் இதுபோன்று குறுஞ்செய்தி வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். பக்கிரி சாமியோ மீதமுள்ள பணத்தையும் செலுத்தி விட்டால் வேலை உறுதியாகி விடும் என தெரிவித்துள்ளார். இதனை நம்பிய தேவநாதன் மீண்டும் 3 லட்சம் ரூபாயை பக்கிரி சாமியிடம் கொடுத்துள்ளார். மொத்த பணத்தையும் பக்கிரிசாமி பெற்ற பிறகு செல்போனுக்கு எந்தவிதமான குறுஞ்செய்தியும் வரவில்லை. அதேபோல் பக்கிரி சாமியிடம் இருந்தும் அழைப்பு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த தேவநாதன் பக்கிரிசாமியை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, கண்டிப்பாக வேலை கிடைக்கும், நிச்சயம் வேலை கிடைக்கும் என ஏதேதோ சொல்லி சமாளித்து வந்துள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத தேவநாதன், கடலூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் பக்கிரி சாமி என்ற அந்த நபர் ரயிலில் பிச்சை எடுக்கும் நபர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் ரயில்வே துறையிலிருந்து குறுஞ்செய்தி அனுப்பியதைப் போன்று குறுஞ்செய்தியை தயார் செய்த பக்கிரிசாமியின் மகள், பக்கிரி சாமியை தேவநாதனிடம் அறிமுகப்படுத்திய புவனேஷ் உள்ளிட்ட நான்கு பேர் மீது கடலூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.