தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கர விழாவில் பங்கேற்பதற்கான யாத்திரையை துவக்கி வைப்பதற்காக மயிலாடுதுறை அடுத்துள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று வந்திருந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இயக்கத்தினரும், அரசியல்கட்சிகளும் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநர் வருகையை முன்னிட்டு அங்கு 1850 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தொடர்ந்து தருமபுர ஆதீனத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றவர், ஆதீனத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை ஆளுநர் திறந்து வைத்தார். கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதினம் மடாதிபதி மற்றும் ஆளுநர் பங்கேற்றுப் பேசினார்கள்.
அந்த நிகழ்வில் பேசிய ஆளுநர் ரவி, 'புராதன நாடான இந்தியா பல்வேறு பெருமைகளையும், சிறப்புகளையும் கொண்டுள்ளது. நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு ஆன்மீகத்தைக் கற்றுத்தரும் குரு போன்ற இடத்தில் தமிழகம் உள்ளது' என்றார். அப்பொழுது பேசிய தருமபுரம் ஆதீனம், ''தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்பவர்களும் உதய சூரியன் என்ற சின்னத்தைக் கொண்டவர்கள். ஆளுநரும் சூரியன். ரவி என்றால் சூரியன் என்ற பொருள் உள்ளது. இரண்டு சூரியனும் ஒன்றாகவே தமிழகத்திற்குக் கிடைத்துள்ளது. இதெல்லாம் தெய்வச் செயல்'' என்றார்.