அண்மையில் பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு அரிக்கொம்பன் யானையை பிடித்திருக்கும் நிலையில் அடுத்தகட்டமாக மேட்டுப்பாளையத்தில் வாயில் காயத்துடன் சுற்றிவரும் பாகுபலி யானையை பிடிப்பதற்கு வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து பாகுபலி யானையை பிடிக்க முடியாத சூழல் நிலவி வருவதால் அதைப் பிடிப்பதற்காக விஜய், வசீம் ஆகிய இரண்டு கும்கி யானைகள் மேட்டுப்பாளையம் வரவழைக்கப்பட்டுள்ளது. காட்டு யானைகளாக பிடிக்கப்படும் யானைகள் உரிய பயிற்சிகளுக்கு பின்பு கும்கி யானைகளாக மாற்றப்படும் நிலையில் தற்பொழுது மேட்டுப்பாளையம் கொண்டுவரப்பட்டுள்ள விஜய், வசீம் ஆகிய இரண்டு கும்கி யானைகளும் தெப்பக்காடு முகாமில் பிறந்து சிறு வயதிலிருந்தே கும்கி பயிற்சி பெற்றது.
விஜய், வசீம் ஆகிய இந்த இரண்டு யானைகளுக்கும் அட்டப்பாடி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரிந்த யானைகளை பிடிப்பதில் முக்கியப் பங்காற்றின. இந்நிலையில் பாகுபலி யானை சுற்றித் திரியும் இடத்தை துல்லியமாக கண்டறிந்த பிறகு இரண்டு யானைகளையும் அங்கு அழைத்துச் சென்று யானையை பிடிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.