"சுலபமாக இவ்வளவு வேலை செய்ய முடியுமா என்ன..? அதற்கு சத்தான ஆகாரம் வேண்டாமா..?" என்ற கேள்வியுடன் விவசாயிகளின் பசி போக்க, சத்தான உணவாக மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது பாரம்பரிய களத்துத் தோசை எனப்படும் இரட்டைத் தோசை.
அரிசி, உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து அரைக்கப்பட்ட மாவில் இட்லி, தோசை வார்ப்பதுதான் வழக்கமான ஒன்று. அதே மாவினைக் கொண்டு முதலில் தோசை ஒன்றை வார்த்தெடுத்து வைத்துவிட்டு, மீண்டும் மற்றொரு தோசையை வார்த்தெடுத்து அதில் நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய், சுக்கு உள்ளிட்ட கலவைகளை தூவியும், எண்ணெய்க்கு பதில் நெய்யை ஊற்றியும் வேகவைத்து, அதன் மேல் ஏற்கனவே வார்த்த வைக்கப்பட்டிருந்த தோசையை மூடியும் ஒருசேர வைத்து எடுப்பதே பாரம்பரிய களத்துத் தோசை எனப்படும் இரட்டைத் தோசை.
சிவகங்கை மாவட்டம் கல்லல் வட்டாரம் வேப்பங்குளத்தில் தங்களுக்கென்று பிராண்ட் வைத்து ஆன்லைனில் அரிசி விற்பனை செய்யும் கிராமத்துக்காரர்கள் உள்ளூரில் நெல் கொள்முதல் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனையறிந்த மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அங்கேயே நெல்கொள்முதல் செய்ய உத்தரவிட, தினசரி 40- க்கும் அதிகமான விவசாயிகள் அங்கு வந்து செல்வதும், நெல்லை எடை வைப்பது, பேக்கிங் செய்வது போன்ற பணிகளில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் அவர்களின் பசி போக்க அங்கு வழியில்லை என்பதால் அங்கேயே பாரம்பரியமிக்க களத்துத் தோசையை வார்த்து விவசாயிகளின் பசியை போக்கி வருகின்றார் ராமலட்சுமி என்பவர். " இது எனக்கு என்னுடைய மாமியார் சொல்லிக் கொடுத்தது. ஒரு நபர் ஒரு தோசை சாப்பிட்டால் போதும். அன்றைக்கு தேவையான அத்தனை சத்தும் கிடைத்துவிடும். பசியும் இருக்காது. அந்த காலத்தில் ஒரு தோசைக்கு ஒரு படி நெல் என பண்டமாற்று முறையில் கொடுப்பார்கள். இந்தக் காலத்திற்கு அது சரியா வருமா எனத் தெரியாது. எனினும், விவசாயிகளின் பசி போக்குவதில் எனக்கு பெருமை தான்." என்கிறார் அவர்.