தாய்லாந்தில் இருந்து விமானத்தில் சென்னை வந்த நபர் ஒருவர் பாம்புக் குட்டிகளைக் கடத்தி வந்த நிலையில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்வேஸ் என்ற விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஒருவர் இரண்டு பெரிய பிளாஸ்டிக் பைகளை வைத்திருந்தார். சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு பைகளை சோதனையிட்டனர். அப்பொழுது அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் கூடைகளைத் திறந்து பார்த்தபோது அதிகாரிகள் பதறி அடித்து ஓடினர். அந்த கூடைக்குள் பல குட்டி பாம்புகள் நெளிந்து கொண்டிருந்தன. ஆனால் அந்த பாம்புகளை எடுத்து வந்த நபரோ கூலாக 'பயப்படத் தேவையில்லை இவை ஒன்றும் கடிக்காது. இவை ரப்பர் பாம்புகளைப் போன்ற விஷமற்ற பாம்புகள்' என அசால்டாக கையில் எடுத்து பிடித்துக் காட்டினார். ஆனால் அதிகாரிகள் உடனடியாக அந்த நபரை கைது செய்தனர்.
பிடிபட்ட பாம்புகள் அனைத்தும் மீண்டும் தாய்லாந்துக்கு அனுப்பப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிலர் இதுபோன்ற பாம்பு குட்டிகளை செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். இதனால் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் பாம்புகளைக் கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.