Skip to main content

பிறந்து ஒரே நாளான குழந்தை இறப்பு! மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்! 

Published on 21/12/2021 | Edited on 21/12/2021

 

Baby dies on the same day as birth! Relatives besieging the hospital!

 


ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே உள்ள அடையன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சம்பத், மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மங்கையர்க்கரசி இவர்களுக்கு 4 வயதில் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது.

 

இந்த நிலையில் மங்கையர்க்கரசி மீண்டும் கர்ப்பமுற்றார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மங்கையர்க்கரசிக்கு சென்ற இரண்டு நாட்களுக்கு முன் 19ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை பிரசவத்திற்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அன்று காலையிலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருந்து வந்தனர். இந்நிலையில் 21ந் தேதி காலை 7 மணிக்கு மங்கையர்க்கரசி தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து உள்ளார். பின்னர் அவருக்கு கருத்தடை ஆபரேஷன் செய்வதற்காக ஆஸ்பத்திரியில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கத்திற்கு பணியாளர்கள் அழைத்துச் சென்றனர்.

 

அப்போது குழந்தை மட்டும் தனியாக இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு பணியில் இருந்த செவிலியர் ஒருவர் அந்த குழந்தையை வந்து பார்த்த போது அது பேச்சு மூச்சின்றி இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து குழந்தையின் தாய் மங்கையர்க்கரசி மற்றும் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மங்கையர்க்கரசி உடனடியாக கருத்தடை ஆபரேஷன் செய்யாமல் குழந்தையை பார்க்க வந்தார். அப்போது அவரது உறவினர்களும் பிரசவ வார்டில் திரண்டு வந்து மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். குழந்தைக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி அங்கிருந்த மருத்துவமனை பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

அப்போது மங்கையர்க்கரசியின்  உறவினர்களில் சிலர் கோபத்தில் ஆஸ்பத்திரியில்  இருந்த கண்ணாடியை உடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே ஈரோடு தலைமை மருத்துவமனை போலீசார்,  மருத்துவர்கள் அங்கு விரைந்து வந்து உறவினர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் குழந்தையின்  உறவினர்கள் சரியான முறையில் மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை அளிக்கவில்லை. அதனால் மங்கையர்க்கரசியை இங்கிருந்து அழைத்துச் செல்கிறோம் என்று அவரை  வெளியே அழைத்து வந்தனர். ஆஸ்பத்திரி நுழைவாயிலில் மீண்டும் அவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மங்கையர்க்கரசி திடீரென மயங்கி விழுந்தார்.  

 

இதனால் அவரை மீண்டும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.  ஆனால் தொடர்ந்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் மங்கையர்க்கரசி கணவர் சம்பத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவியது. மருத்துவர்களும், காவல்துறையினரும் தீர விசாரித்த பிறகே குழந்தை இறப்பின் காரணம் குறித்துத் தெரியவரும். 

 

 

சார்ந்த செய்திகள்