புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தொடரும் விவசாயிகளின் போராட்டம் தற்போது தலைநகரான டெல்லியில் மட்டும் அல்ல தமிழகத்தின் திருச்சியிலும் துவங்கியுள்ளது. மத்திய அரசானது இந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர், அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது,
டெல்லியில் விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து நடத்திவரும் விவசாயிகளைப் போன்று தமிழகத்திலும் இந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி திருச்சி மற்றும் சென்னையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். ஒருவேளை இந்தச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால், தமிழகத்திலிருந்து விவசாயிகள் டெல்லியில் சென்று தற்கொலை போராட்டத்தை நடத்துவோம் என்றும், மத்திய அரசும் மாநில அரசும் தமிழக விவசாயிகளைத் தற்கொலைக்குத் தூண்டுவதாகவும் குற்றம்சாட்டினார்.
போராட்டம் நடத்துவதற்கு அனுமதி தரக் கோரி, தமிழக அரசிடமும் காவல் துறையிடமும் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். இருப்பினும் காவல்துறை தரப்பில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுவதால், நீதிமன்றம் மூலம் அனுமதியைப் பெற்று போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.