'சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் கோவிலை வைத்து அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும். இல்லை என்றால் கோவிலை அரசு கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும்' என்று அகில உலக அய்யாவழி சேவை அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. குமரி மாவட்டம் சாமித்தோப்பில் அய்யா வைகுண்டா் பதி (கோவில்) உள்ளது. அய்யா வைகுண்டருக்கு ஆண்டுத்தோறும் மாசி மாதம் 20-ம் தேதி நடக்கும் அவதார தின விழாவில் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்து கொள்வார்கள். இதையொட்டி அன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை விடுவது வழக்கம்.
மேலும் இங்கு தினம் நடக்கும் பூஜைகளிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இங்கு வந்துள்ளனர். இந்த நிலையில், அந்தக் கோவிலை நிர்வகிப்பதில் இரு பிரிவினருக்கிடையே பிரச்சனைகள் இருந்து வந்தது. இதனால் அந்தக் கோவிலை அரசு எடுத்து நடத்த வேண்டுமென்று பக்தா்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்ததைத் தொடர்ந்து அரசும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டது. அரசின் முயற்சியைக் கண்டித்து கோவிலை நிர்வகித்து வரும் பாலபிரஜாதிபதி அடிகளார் தலைமையில் சாமித்தோப்பில் உண்ணாவிரதமும் நடந்தது. இதில் நாம் தமிழா் கட்சியின் ஓருங்கிணைப்பாளா் சீமான் கலந்து கொண்டு அரசின் நடவடிக்கைக்கு எதிராகப் பேசினார். பக்தா்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து தற்போது அரசு அந்த முயற்சியை கிடப்பில் போட்டது.
இந்நிலையில் அய்யா வழி பக்தர்களின் அமைப்பான அகில உலக அய்யா வழி சேவை அமைப்பின் தலைவா் சிவபிரகாசம் இன்று செய்தியாளா்களிடம் பேசும்போது, "அய்யா வைகுண்டா் என்பது நாராயணசாமியின் ஒரு அவதாரம். அவா் கடவுள் அவதாரம் கொண்டவா். இது எங்களின் புனித நூலான அகிலத்திரட்டிலேயே கூறப்பட்டுள்ளது. தற்போது இந்தக் கோவிலை வைத்து அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஓட்டுக்காக அரசியல்வாதிகள் இந்தக் கோவிலுக்கு வருகிறார்கள். அவா்களுக்கு முதல் மரியாதை கொடுக்கிறார்கள். ஆனால் அவா்களால் இந்தக் கோவிலுக்கு எந்தப் பலனும் கிடைத்தது இல்லை. இன்று பக்தர் போல் பேசினாலும், ஆரம்பத்தில் கடவுளை நம்பாத, கடவுளைப் பற்றி மோசமாகப் பேசிய சீமானை, கோவிலுக்குள் அனுமதித்து இருக்கிறார்கள். இது நியாயமா? அதே போல் அங்கு வரும் பக்தா்களுக்கு எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காமல், வருமானமே குறிக்கோளாகக் கொண்டிருககிறார்கள். இதனால் தமிழக அரசு உடனடியாக அந்தக் கோவிலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென்ற பக்தா்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்" என்றாா்.