Skip to main content

மரங்களின் காதலர் விதைத்த விழிப்புணர்வு... பிறந்தநாளில் கடல் கடந்து நட்டப்பட்ட மரக்கன்றுகள்!!  

Published on 30/11/2020 | Edited on 30/11/2020

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில், சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர், கற்பகசோலை 'மரம்' பெ.தங்கசாமி. சராசரி விவசாயியாக இருந்த மரம் தங்கசாமி, விவசாயத்தில் நட்டம் ஏற்பட்டு கடனாளியாக இருந்தார். இவரின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது, அவரது திருமணம். திருமணக் கோலத்தோடு தனது தோட்டத்தில் மரக்கன்று நட்டு தனது இல்லறவாழ்வைத் தொடங்கினார்.

 

அதன் பிறகு, தேசியத் தலைவர்கள் தொடங்கி உள்ளூர் தலைவர்கள் என அனைவரின் பிறந்த நாள், நினைவு நாள் என எந்த ஒரு நாளாக இருந்தாலும் அவர்கள் நினைவாக ஒரு மரக்கன்றை தன் தோட்டத்தில் நட்டார். மழை, வறட்சி அத்தனையும் தாங்கி வளரத் தொடங்கியது மரங்கள். பழ மரங்களைத் தேடி பறவைகள் வந்து, பலவகை மரக்கன்றுகளுக்கு விதைபோட்டது. நட்ட மரங்களைவிட பறவைகளால் விதைக்கப்பட்ட மரங்கள் அதிகம். இப்படித் உருவான தோட்டத்தின் மரங்கள், அவரின் கடனை அடைக்க உதவியது.

 

Awareness sown by the lover of trees ... on a birthday Planted saplings

 

மரங்களால் தனக்கு நட்டமில்லா வருமானம் கிடைப்பதை மற்றவர்களிடமும் கொண்டுசெல்ல நினைத்து, தான் கலந்து கொள்ளும் திருமணம், காதணி போன்ற விழாக்களில், மரக்கன்றுகளை நடுவதுடன், மணமக்களுக்கு மரக்கன்றுகளைப் பரிசாகக் கொடுத்து வந்தார். தொடர்ந்து பள்ளி, அலுவலகங்களில் சுதந்திர தினம், குடியரசு தினம், ஆண்டு விழாக்களில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு, விழாக்களை தொடங்கி வைத்தார். இப்படித் தொடங்கிய அவரது இயற்கைப் பயணம் தமிழ்நாடு முழுவதும் விரிவடைந்தது. ஆண்டுக்கு ஒருமுறை சைக்கிளில் தமிழகம் முழுவதும் சுற்றி மரக்கன்றுகளை நடுவதுடன், பள்ளி, கல்லூரிகளில் மரக்கன்றுகளை வளர்க்க வேண்டியதற்கான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தினார். இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாருடன் தொடர்ந்து பயணித்தார். இப்படியாக தொடர்ந்த அவரது பயணத்தில், விழாக்களில் தாம்பூலப் பைக்கு பதில் மரக்கன்றுகளைக் கொடுக்க வலியுறுத்தி வந்தார். 

 

'மரப்பயிரும் பணப்பயிரே' என்ற வாசகத்துடன் தொடங்கிய அவரது புரட்சிப் பயணம், அவரது இறுதிக் காலம் வரை தொடர்ந்தது. இவரது இந்தப் பயணத்தை தொடர்ந்து, கடந்த சில வருடங்களாக, இவரது பெயரில் தமிழகத்தின் பல ஊர்களிலும் குருங்காடுகள் அமைக்கப்பட்டு வருகிறது.

 

cnc

 

இந்நிலையில், இன்று நவம்பர் 30 ஆம் தேதி, மரம் தங்கசாமி பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, சிங்கப்பூர், மலேசியா, குவைத், அமெரிக்கா, மாலத்தீவு போன்ற பல நாடுகளிலும் மரக்கன்றுகள் நட்டுள்ளனர். ராமநாதபுரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பேரன் சேக்சலீம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். கீரமங்கலம் காவல்நிலைய வளாகத்தில் மெய்யநாதன் எம்.எல்.ஏ மற்றும் கைஃபா, நாம் தமிழர் கட்சியினர் மரக்கன்றுகளை நட்டனர்.

 

அதேபோல புதுக்கோட்டை, தஞ்சை  மாவட்டங்களில் கீரமங்கலம், செரியலூர், நெடுவாசல், அரசர்குளம், பேராவூரணி மற்றும் பல கிராமங்களிலும் மரக்கன்றுகள் நட்டுள்ளனர். அதேபோல பெங்களூரு, சென்னை, டெல்லி, செங்கல்பட்டு என இந்தியாவில் பல இடங்களிலும் தமிழகத்தில் ஏராளமான ஊர்களிலும் சுமார் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டுள்ளனர்.

 

தனி ஒருவராக தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை விதைத்தார். ஆனால் இன்று இளைஞர்கள் ஏராளமானோர் விதைக்கிறார்கள். எல்லாம் அவர் விதைத்த விழிப்புணர்வு தான் என்கிறார்கள் இளைஞர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்