
விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்க அவசரக் கூட்டம் நேற்று (15.12.2021) மாலை பழமலைநாதர் கோவிலில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் தங்க. தனவேல் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் சுந்தர்ராஜன், நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை மாவட்டச் செயலாளர் கதிர்காமன், பாஜக மாவட்ட விவசாய அணி தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழிப்புணர்வு இயக்க துணை ஒருங்கிணைப்பாளர் ஆட்டோ கண்ணன் வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தில், வருகின்ற சட்டசபை கூட்டத் தொடரிலேயே விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட வேண்டும். அவ்வாறு அமைக்கப்படாவிட்டால் ஜனவரி முதல் தொடர் போராட்டங்கள் நடத்துவது. முதற்கட்டமாக வருகிற 17ஆம் தேதி (நாளை) பாலக்கரை உழவர் சந்தை முன்பிருந்து ஊர்வலமாகச் சென்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், கோட்டாட்சியர் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர், வர்த்தகர் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் சங்கத்தினர், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இறுதியில் விழிப்புணர்வு இயக்க நிர்வாகி ஆம்.எம். பிரபாகரன் நன்றி கூறினார்.