கடந்த ஆகஸ்ட் 11- ஆம் தேதி நெல்லை மாவட்டம் கடையம் நகரிலுள்ள வயதான தம்பதிகளான சண்முகவேல், செந்தாமரை தாக்க வந்த இருவரை அவர்கள் விவேகத்துடன் செயல்பட்டு விரட்டியடித்தார்கள். அது சமயம் தம்பதியரின் 35 கிராம் நகையும் பறிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த இரண்டு மாதமாக தனிப்படையின் தேடுதலின் போது பாலமுருகன் மற்றும் பெருமாள் இருவரும் சிக்கினர். அவர்களிடமிருந்து 35 கிராம் செயினும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து மாவட்ட எஸ்.பி.யான அருண் சக்திகுமார் கூறியதாவது. இன்ஸ்பெக்டர் சாகுல் கமீது உட்பட 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மிகவும் நுணுக்கமாக புலனாய்வு செய்த தனிப்படையினர் அதே பகுதியின் கீழக்கடையத்தைச் சேர்ந்த பாலமுருகன் (30) மற்றும் அவரது நண்பர் பெருமாள் (54) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்தனர்.
தம்பதியரிடம் பறிக்கப்பட்ட 35 கிராம் செயினும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது. இதில் பெருமாள் தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியைச் சேர்ந்தவர். கொள்ளையடிப்பதே இவர்களின் நோக்கம். உள்ளூர்காரரான பாலமுருகன் மூலம் வேவு பார்த்து தம்பதியரின் வீட்டை டார்கெட் செய்தனர். இவர்கள் பக்கத்து தோட்டத்தின் மோட்டார் ரூமை உடைத்து திருடிய இரண்டு ஏர்கன்னும் கைப்பற்றப்பட்டது. பாலமுருகன் மீது 38 வழக்குகளும், பெருமாள் மீது 8 வழக்குகளும் உள்ளன. மேலும் இவர்கள் மற்றொரு இடமான பொன்மலைப் பகுதியில் பீடி சுற்றும் ஒரு பெண்ணிடமிருந்து பறித்த நகையும் பறிமுதல்செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அடையாள அணி வகுப்பு நடத்தப்பட உள்ளது என்றார் எஸ்.பி.