தமிழ்நாட்டில் கரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் உயர்ந்துவரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் முக்கியமாக வார இறுதி நாளும், விடுமுறை நாளுமான ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் முழு முடக்கம் அமலில் இருக்கும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் முழு நேர ஊரடங்கு காரணமாக போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவால் இன்று கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, கீழாத்தூர், பெரியாளூர் போன்ற பகுதிகளில் நடக்க இருந்த சுமார் 70 மொய் விருந்து நிகழ்ச்சிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து, பின்னர் வேறொரு தேதியில் நடத்தப்படுமென அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'புதுக்கோட்டை மாவட்டத்தில் முக்கியமாக ஆலங்குடி உட்கோட்டத்தில் உள்ள ஆலங்குடி, கீழாத்தூர், வடகாடு, கொத்தமங்கலம், அணவயல், நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி மொய் விருந்துகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளைத் தவிர மொய் விருந்துகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஊரடங்கு காலம் முடியும் வரை தவிர்க்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
ஆனால், இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். முழு ஊரடங்கு நாளில் பல மொய் விருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது முழுமையாகத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதால் ஏராளமான மொய் விருந்துகளுக்கு அழைப்பிதழ் கொடுத்து பந்தல் அமைத்து அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டதால் லட்சக்கணக்கான ரூபாய் பணம் இழப்பு ஏற்படுவதாக விழாக்குழுவினர் கூறுகின்றனர். மேலும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மொய் விருந்து விழாக்களை மட்டுமாவது கரோனா கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதிக்க வேண்டும் என்கின்றனர். கடந்த ஆண்டும் இதேபோல பல கிராமங்களில் மொய் விருந்துகள் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.