ஆவடி: பீரங்கி பயிற்சியின்போது ராணுவ வீரர் வாயு தாக்கி மரணம்
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடைமலைப்புதூரைச் சேர்ந்தவர் சக்திவேல். 20 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்தார். தற்போது திருவள்ளுர் மாவட்டம், ஆவடியில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில் பீரங்கி பயிற்சியாளராக பணியாற்றினார். வழக்கம்போல் இன்று காலை டி 72 என்ற ரஷிய ரக பீரங்கியில் பயிற்சிக்கு எடுத்துச் சென்றார். அப்போது திடீரென சிலிண்டர் திறந்து வாயு வெளியேறியதில் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். பீரங்கியில் உள்ள அவசர கால கதவு திறக்கப்படாததால் அவர் வெளியேற முடியவில்லை. உடன் சென்ற ரவி என்பவர் கொடுத்த தகவலின்பேரில் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். ஆவடி போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சக்திவேலுக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும், 7 வயது ஒரு மகளும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
தேவேந்திரன்