Skip to main content

தானாய் உருவான புதிய பறவைகள் சரணாலயம்!

Published on 14/10/2020 | Edited on 14/10/2020

 

Automatic New Bird Sanctuary! near perambalur

 

 

பெரம்பலூர் அருகே மருதையாற்று நீர்த்தேக்க பகுதியில் குளத்தின் நடுவே அமைந்த குட்டித் தீவில் பறவைகள் கூட்டம் தஞ்சம் புகுந்து வருகிறது. 

 

நீர்த்தேக்கத்தின் நடுவே மண் திட்டு அமைத்தால் வருங்காலத்தில் நீர்த்தேக்கம் பறவைகள் சரணாலயமாகி சுற்றுலா தலமாகும் என்ற நம்பிக்கையிலுள்ள கிராம மக்கள் மண் திட்டு அமைத்து மரங்களை உருவாக்கிட அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆதனூர் கிராமத்தில் மருதை ஆற்றையொட்டியுள்ள தாமரை குளத்தின் நடுவில் உள்ள பாறை திட்டில் கருவை மரங்களும் ஈச்ச மரமும் வளர்ந்து அடர்ந்த புதர் போல் காட்சி தருகிறது. இந்த புதர்மேட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குமுன் கொக்கு, நாரை, நீர் காக்கை, தூக்கணாங்குருவி, வாத்துகள் என பறவையினங்கள் ஒவ்வொன்றாய் வந்து கூடுகள் கட்டி வசிக்க தொடங்கிய நிலையில் தற்போது புது விருந்தாளியாக அழகழகான வெளிநாட்டு பறவைகளும் வரத்தொடங்கியுள்ளது. 

 

அந்த சிறிய குளம் ஆயிரகணக்கான பறவைகளுடன் ஒரு குட்டி சரணாலயமயாய் உருவெடுத்துள்ளது. தினம்தோறும் மாலை நேரங்களில் உள்ளூர் பறவைகளுடன் வெளிநாட்டு பறவைகளும் சேர்ந்து கூச்சலிடும்போது எழும் ஒலியானது ஆதனூர் கிராமம் மட்டுமின்றி சுற்றுபுற கிராம மக்களையும் கவர்ந்திழுக்க வைத்திருக்கிறது. 

 

Automatic New Bird Sanctuary! near perambalur

 

 

தற்போது குளத்தை வட்டமிடும் பறவை கூட்டம், தாமரை தடாகத்தில் ஓடி விளையாடும் அழகழகு பறவைகள் எனகாட்சி தருவதால் தற்போது அப்பகுதி மக்களுக்கு அந்த தாமரைகுளம் பொழுதுபோக்கும் சுற்றுலாதலமாய் மாறி வருகிறது.

 

இந்த பறவைகளை வேட்டையாட வருபவர்களிடமிருந்து அவற்றை பாதுகாப்பதாக கூறும் சிறுவர்கள் இதனால் பண்டிகை காலங்களில் குளக்கரை பகுதியில் பட்டாசு கூட வெடிப்பதில்லை என்கிறார்கள்.

 

கடந்தாண்டு குளத்தை சுற்றி புதர் மண்டியிருந்த கருவை மரங்களை அகற்றிய கிராம மக்களுக்கு விதவிதமான பறவைகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள இந்த பாறை திட்டிலுள்ள புதர்களை மட்டும் அகற்ற மனமின்றி விட்டு வைத்துள்ளதாக கூறுகின்றனர்.

 

மேலும் நீர்த்தேக்க கட்டுமானப்பணி தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே இங்கு அடைக்கலம் தேடி வரத்தொடங்கியுள்ள புது விருந்தாளிகளான இந்த அழகிய வெளிநாட்டு பறவைகள் தங்கி இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக நீர்த்தேக்கத்தின் மையத்தில் செயற்கையாக மண் திட்டுகள் அமைத்து மரங்கள் உருவாக்கி கொடுத்தால் வருங்காலத்தில் மருதையாற்று நீர்த்தேக்கத்தில் நீரை தேக்கிய பிறகு அந்த மண் திட்டுகளில் லட்சக்கணக்கில் பறவைகள் தஞ்சம் புகுந்து "கொட்டரை மருதையாற்று" நீர்த்தேக்கம் ஒரு பறவைகள் சரணாலயமாக உருவெடுக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 

 

இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆதனூர். மற்றும் கொட்டரை கிராமங்களுக்கு நடுவே செல்லும் மருதையாற்றை தடுத்து கடந்த 2016ஆம் ஆண்டு அமைக்க தொடங்கிய இந்த கொட்டரை நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்பு பகுதி சுமார் 175 சதுர கி.மீ பரப்பளவை உள்ளடக்கியது. இந்த நீர்த்தேக்கம் வருங்காலத்தில் எழில் கொஞ்சும் ஒரு சுற்றுச்சூழல் மையமாக அமையவிருப்பதை உறுதிபடுத்தும் விதத்தில் தற்போதே குவிந்து வருகின்றன இந்த பறவை கூட்டங்கள் என்று கூறும் அப்பகுதி மக்கள் தங்களின் வாழ்விட சூழலை முன்கூட்டியே தீர் மானிக்கும் சக்தி பறவையினங்களுக்கு இயற்கையாகவே உள்ளது போல என்கின்றனர் ஆச்சர்யத்துடன். 

 

பெரம்பலூர் அருகேயுள்ள அரியலூர் மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தலமான "கரைவெட்டி பறவைகள் சரணாலயம்" மருதையாற்று நீர்த்தேக்கத்திலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்