திருச்சிக்குள் ஒரே பதிவெண் கொண்ட ஆட்டோக்கள் ஓடுவதாக காவல்துறையினருக்குத் தொடர்ந்து தகவல் கிடைத்துவந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்திற்கு வந்த அழைப்பில் கல்லுக்குழி பகுதியில் ஒரே பதிவெண் கொண்ட இரண்டு ஆட்டோக்கள் ஓடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரே நம்பரில் இரண்டு ஆட்டோக்கள் ஓடுவது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த ஆட்டோக்களின் உரிமையாளரான தங்கமணி (32) என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இரண்டு ஆட்டோக்களுக்கான ஆர்சி புக்கைக் கேட்டபோது அவர் ஒன்றை மட்டுமே நீட்ட, இன்னொன்னு எங்க என்று போலீஸ் கேட்க, அதாங்க இது என்று செந்தில் பாணியில் பதிலளிக்க, வெறுப்பான போலீஸ் இரண்டு ஆட்டோக்களையும் ஸ்டேஷனுக்கு ஓட்டிச் சென்றுள்ளனர்.
மோசடி குற்றம் என்பதால் பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்களைக் குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஆட்டோ டிரைவர் ஒருவர் கூறும்போது, “திருச்சி மாநகரில் முறையாக ஆர்டிஓ அதிகாரிகள் விசாரணை நடத்தினால் பாதி ஆட்டோக்கள் பறிமுதல் ஆகும். பல ஆட்டோக்கள் லைசன்ஸ், ஆர்சிபுக் இல்லாமலும், மண்ணெண்ணெயிலும்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் ஆர்டிஓ அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை” என்று ஆதங்கத்தை வௌிப்படுத்திச் சென்றார்.